'கிரியேடிவ் ஹேண்ட்ஸ்' நிறுவனம், சென்ற மாத இறுதியில் சிறுவர்களுக்காக ஒலிவடிவிலான கதைப்புத்தகங்களையும் உயிரோவியக் கதைகளையும் 'கதை நேரம் 2.0' என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தியது.
கேலிச்சித்திரக் கதை எழுதும் போட்டியின் வெற்றியாளர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி தேசிய நூலகத்தின் 'பொட்' அரங்கில் நடைபெற்றது.
"ஆத்திரம் கொள்ளும் ஆ", "சேர்ந்தே இருப்பது வலிமை", "எதை வாங்கலாம்?","தீனா" என வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நான்கு கதைகளுக்கு உயிரோவிய வடிவம் கொடுத்தார் 'கிரியேடிவ் ஹேண்ட்ஸின்' நிறுவனர் ஜெகன்னாத் ராமானுஜம்.
உள்ளூர் பாணியைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்த உயிரோவியக் கதைகள் கண்களுக்கு விருந்தளிப்பதோடு சிறுவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றன.
தமிழில் அமைந்துள்ள இந்த உயிரோவியக் கதைகளில், கதையின் முடிவைத் தேர்ந்தெடுக்க சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை அவர்களிடம் வளர்ப்பதோடு சில நன்னெறிப் பண்புகளை சிறுவர்கள் கற்றுக்கொள்ளவும் இது வகைசெய்கிறது.
பொதுமக்களுக்காக எழுத்தாளர் செல்வராணியின் 'மர்ம மணம்', 'ஜவ் கொய்த்தியாவ்' ஆகிய கதைகளுடன், எழுத்தாளர் ஹரிஹரனின் 'அம்மு', 'பயணம்' ஆகிய கதைகளும் ஒலி வடிவமாக்கப்பட்டுள்ளன. www.kathaineram.com என்ற இணையப்பக்கத்தில் இவற்றைக் கேட்கலாம்.
சென்ற மாதம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கேலிச்சித்திரக் கதை எழுதும் போட்டியை நடத்தியது 'கிரியேடிவ் ஹேண்ட்ஸ்'.
ஏற்கெனவே வரையப்பட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதுவதற்கு 'ஸ்பீச் பப்பல்ஸ்' கொடுக்கப்பட்டன.
இளையர்கள் தங்கள் சொந்த கதைக் களத்தை உருவாக்கி வசனங்களையும் எழுதினார்கள். அவர்களின் படைப்புத் திறன், மொழி வளம், புத்தாக்கச் சிந்தனை ஆகியவை போட்டியில் சோதிக்கப்பட்டன.
கூடிய விரைவில், சிண்டா, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து தமிழில் கேலிச்சித்திரம் வரையும் பயிலரங்குகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது 'கிரியேடிவ் ஹேண்ட்ஸ்'.
2019ஆம் ஆண்டு நவம்பரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ஜெகன்னாத், உள்ளூர் தொடர்புத்துறை நிறுவனங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உயிரோவிய முறையில் பல்வேறு படைப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்.
செய்தி:
மாதங்கி இளங்கோவன்

