மூத்தோருக்கு தொழில்நுட்பம் கற்றுத்தரும் 'உங்கள் நண்பன்'

மூத்தோருக்கு தொழில்நுட்பம் கற்றுத்தரும் 'உங்கள் நண்பன்'

2 mins read
c6ad2aa1-fd8c-4417-b5e6-7d25ed208ae4
'உங்கள் நண்பன்' திட்டத்தின்கீழ் மூத்தோரின் வீடுகளுக்கே சென்று தொழில்நுட்ப நடைமுறைகள் கற்றுத்தரப்படும். படம்: ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு -

தமிழ்ப் புத்­தாண்டை முன்­னிட்டு ஏப்­ரல் 14ஆம் தேதி 'உங்­கள் நண்­பன்' (யுவர் ஃப்‌ரெண்ட்) எனும் மூத்­தோ­ருக்­கான தொழில்­நுட்­பக் கற்­றல் திட்­டத்தை ஹவ்­காங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத்­திட்­டம் 55 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் நிரம்­பிய மூத்­தோ­ருக்குத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும் முறை­கள் பற்றி கற்­பிப்­ப­தோடு அவர்­க­ளு­டன் நட்பு பூண்டு தொடர்­பில் இருப்­ப­தற்­கும் வழி­வ­குக்­கிறது.

செயற்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­கள் தொடர்ந்து வாரந்­தோ­றும் பங்­கேற்­பா­ளர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு அவர்­க­ளுக்­குத் தொழில்­நுட்­பம் பற்­றிய அண்­மைய தக­வல்­க­ளைப் புரி­ய­வைக்­கின்ற­னர்.

அத்­து­டன் திறன்­பேசி பயன்­பாடு­கள், 'வாட்ஸ்­அப்', 'ஃபேஸ்புக்' போன்ற செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் முறை, மடிக்­க­ணி­னி­யைப் பயன்­ப­டுத்­தும் முறை ஆகி­ய­வை­யும் சொல்­லித்­த­ரப்­ப­டு­கின்­றன.

"கொவிட்-19 நோய்ப் பர­வல் காலத்­திற்­குப் பின் தொழில்­நுட்­பப் பயன்­பாடு இன்­றி­ய­மை­யா­த­தா­க ஆகியிருக்கிறது.

'உண­வ­கங்­களில் உணவு வாங்கு­வ­தைக்­கூட 'கியூ­ஆர்' குறி­யீடு வழி­யா­கச் செய்­து­வ­ரும் தொழில்­நுட்பக் கால­கட்­டத்­தில், மூத்­தோ­ரும் இந்­தப் பய­ணத்­தில் நம்­மு­டன் இணை­வது மிக­வும் அவ­சி­யம். எனவே அவர்­கள் இல்­லம் தேடிச் சென்று தொழில்­நுட்­பத்­தைக் கற்­பிக்­கி­றோம்.

"அத்­து­டன் ஆர்­வம் உள்­ளோ­ருக்கு எளிய வகை திறன்­பேசி, மடிக்­க­ணி­னி­கள் போன்­ற­வற்றை வழங்­கு­கி­றோம்.

"இதில் இணைந்து பயன்­பெற விரும்­பும் மூத்­தோர் ஹவ்­காங் சமூக மன்­றத்தை நாட­லாம்," என்று ஹவ்­காங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் தலை­வர் ராஜா மோகன் கூறி­னார்.

ஹவ்­காங் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­கர் லீ ஹாங் சுவான், "இதன் மூலம் குடி­யி­ருப்­பா­ளர்­களைச் சென்­ற­டை­வது எளிது; அத்­து­டன் மூத்­தோருடன் தொடர்பில் இருக்கவும் எங்­க­ளது தொண்­டூ­ழி­யர்­க­ளைப் பற்றி மூத்தோர் அறிந்துகொள்ளவும் இது சிறந்த வாய்ப்­பா­க­ அமை­யும்," என்று குறிப்­பிட்­டார்.

செய்தி: மோன­லிசா