கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு அன்னையர் தினத்தை ஒட்டி, சென்ற சனிக்கிழமை மாலை நேரடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
சிறப்பு அம்சமாக இன்றைய வாழ்க்கையில் நண்பர்கள் நம்மை ஏணியாக உயர்த்துகிறார்களா? சறுக்கு மரமாகத் தாழ்த்துகிறார்களா? என்ற தலைப்பிலான பட்டிமன்றம் இடம்பெற்றது.
திரு அ. முஹம்மது பிலால் நடுவராக இருந்த பட்டிமன்றத்தில் நபிலா நஸ்ரின், சுரேஷ் கெளஷிக், முத்து சுவேதா ஆகியோர் நண்பர்கள் ஏணியாக உயர்த்துகிறார்கள் என்ற அணியில் தங்கள் வாதங்களை எடுத்துக்கூறினர்.
வெண்ணிலா அசோகன், ஹரிவர்த்தினி மோகன், அர்ஷத் ஆகியோர் நண்பர்கள் சறுக்கு மரமாக நம்மைத் தாழ்த்துகிறார்கள் என்ற அணியில் வாதிட்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேலாங் மேற்கு சமூக மன்ற மேலாண்மைக்குழுத் தலைவர் குவா சூன் யாவ் கலந்துகொண்டார்.
தமிழ் மொழியை இளையர்களும் மாணவர்களும் பேச ஊக்கமளிக்கும் கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.
ஐம்பது பேர் நேரிலும் 'ஸூம்', 'ஃபேஸ்புக்' நேரலை ஆகியவற்றின் வாயிலாகப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இரு அணியினரும் முன்வைத்த சுவையான வாதங்களுக்குப் பின்னர் நடுவர் முஹம்மது பிலால் தமது கருத்துகளைக் கூறி இன்றைய வாழ்க்கையில் நண்பர்கள் நம்மை ஏணியாக உயர்த்துகிறார்கள் எனத் தீர்ப்பளித்தார்.

