அருணா கந்தசாமி
முழுநேர வேதியியல் துணைப்பாட ஆசிரியராகப் பணிபுரியும் 37 வயது கணேஷ் குமார், மார்சிலிங் வட்டாரத்தில் ஒரு மனநலப் பூங்காவை உருவாக்கியிருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே தோட்ட வேலையில் ஈடுபடுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்கு என்று குறிப்பிட்ட திரு கணேஷ், தன் தாயார் தவறியபோது மன அழுத்தத்திலிருந்து மீண்டுவருவதற்குத் தோட்ட வேலை செய்வது மிகவும் உதவியாக இருந்ததாகக் கூறினார்.
தோட்டத்தைத் தற்போது 20 தொண்டூழியர்களுடன் சேர்ந்து பராமரித்து வருகிறார் இவர்.
மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றால் அவதியுறுவோருக்கு உதவும் நோக்கில் தன் தந்தை திரு தேவகுமாருடன் இணைந்து இந்த சமூகத் தோட்டத்தை உருவாக்கியதாகப் பகிர்ந்துகொண்டார் கணேஷ்.
மார்சிலிங் சாலையிலிருக்கும் புளோக்குகள் 133, 134, 135 ஆகியவற்றுக்கும் 'உட்லண்ட்ஸ் டவுன் பார்க் ஈஸ்ட்'க்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது உட்லண்ட்ஸ் தாவரவியல் பூங்கா.
வண்ண மலர்களின் அணிவகுப்பாகக் காட்சியளிக்கும் இ்ந்த இடம் வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்றவற்றுடன் பல வகைப் பறவைகளையும் ஈர்க்கிறது.
வட்டார மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிளிகளும் இந்தத் தோட்டத்தில் வளர்கின்றன.
தோட்டத்தின் நடைபாதைகள், நுழைவாயில், கிளிக்கூண்டு போன்றவை தொண்டூழியர்களின் கைவண்ணம்.
வருங்காலத்தில் விலங்குப் பராமரிப்பு நிலையம், கலை நிகழ்ச்சிகள், செயற்கை அருவி போன்றவற்றையும் அமைக்கத் திட்டமிடுவதாக கணேஷ் தெரிவித்தார்.
மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டுவருவதற்குத் தோட்ட வேலை செய்வது நல்ல தீர்வு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்தத் தோட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.
"முன்பு வீட்டிலேயே அடைந்து கிடந்த முதியவர்கள் இப்போது அன்றாடம் அழகிய தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்கிறார்கள்.
முதியவர்களுக்காகவே மலை அடிவாரத்தில் சமதளப் பகுதியிலும் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது," என்றார் கணேஷ்.
2020ஆம் ஆண்டில் இந்த முயற்சியைத் தொடங்கியபோது அண்டைவீட்டார் தன்னை அதிகம் ஊக்குவித்ததாகவும் தொடர்ந்து தேசியப் பூங்காக் கழகமும் மார்சிலிங் 'ஸோன் 3' நகர மன்றமும் ஒத்துழைப்பு அளித்ததாகவும் இவர் கூறினார்.
இதுபோன்ற மனநலப் பூங்காக்கள் மற்ற குடியிருப்புப் பேட்டைகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது இவரது விருப்பம்.