கி. ஜனார்த்தனன்
சிங்கப்பூரின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களையும் அவைகுறித்த தகவல்களையும் கொண்டிருப்பவர்கள் முன்வந்து அவற்றைப் பகிரும்படி தேசிய மரபுடைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தலைவர்கள் மட்டுமின்றி, புகழ் வெளிச்சத்திற்கு வராமலே சமூகத்திற்குப் பங்காற்றியவர்களுடன் தொடர்புடைய சின்னங்களையும் இந்திய சமூகத்தினரிடம் இருந்து வரவேற்பதாகக் கழகம் குறிப்பிட்டது.
பொதுமக்களால் பொதுமக்களுக்காக நிறுவப்படும் ஒன்றாக சிங்கப்பூர் நிறுவனர்கள் நினைவிடம் விளங்கும் எனக் குறிப்பிட்ட மரபுடைமைக் கழகம், இந்திய சமூகத்தைச் சேர்ந்த நினைவுச்சின்னங்கள் தேவைப்படுவதாக வலியுறுத்தியுள்ளது.
நினைவுச்சின்னங்கள் 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்திருக்கவேண்டும். சிங்கப்பூரின் சுதந்திரத்துடன் தொடர்புடைய தேசியக் கொள்கை, வரலாற்று மைல்கல் அல்லது இந்நாட்டை வடிவமைத்த தலைவர்களுடன் தொடர்புடைய கலாசார பன்முகத்தன்மை, துணிச்சல், வெளிப்படைத்தன்மை, மீள்திறன், நேர்மை, தன்னைவிடப் பிறரை முன்னிலைப்படுத்துதல் ஆகிய பண்புகளையும் அந்தச் சின்னங்கள் பிரதிபலிக்க வேண்டும்.
கரையோரப் பூந்தோட்டத்தில் தற்போது உள்ள இந்தச் சின்னங்கள் தொடர்பான நகரும் கண்காட்சி, சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைத்தொகுதிகள், சமூக நிலையங்கள், நூலகங்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு 2023 பிப்ரவரி வரை தொடர்ந்து இடம் மாறும்.
இந்த நகரும் கண்காட்சியின் இணைய வடிவத்தை மரபுடைமைக் கழகத்தின் இணையத்தளத்தில் காணலாம்.
2015ஆம் ஆண்டு பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள்வழி இந்த நினைவகம் எங்கே நிறுவப்படவேண்டும், இதன் கட்டமைப்பு, வடிவம், பார்வையாளர் அனுபவம் போன்றவை குறித்த கருத்துகள் திரட்டப்பட்டதாக மரபுடைமைக் கழகம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தலைவர்களுடன் நீங்கள் உரையாடியிருந்தால் அதுபற்றிய கதைகள், புகைப்படங்கள் அல்லது பொருள்களைப் பகிரலாம் என்று நிறுவனர்கள் நினைவிடத்தின் செயற்குழு உறுப்பினர் துர்கா ராஜேந்திரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"நாளைய தலைமுறையினருக்குப் பொக்கிஷங்களாக இருக்கக்கூடிய சின்னங்களைப் பகிர்ந்துகொள்வது நாட்டுக்கான அருஞ்சேவையாகும். இந்தச் சின்னங்கள் புகழ்பெற்ற தலைவர்களுடன் தொடர்புடையவையாக இருக்கவேண்டும் என்றில்லை. பரவலாக இன்னும் அறியப்படாத சமூக சேவையாளர்கள் அல்லது உங்களுக்கே சொந்தமான சின்னங்களை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்" என்று அவர் கூறினார்.

