மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து நீண்டநாள் சேவை பதக்கத்தைப் பெற்றுள்ளார் ஆகாயப்படை செயல்முறைகள், அமைப்புகளின் நிபுணர் மூன்றாம் ராணுவ நிபுணர் (எம்இ3) உமாதேவி கிருஷ்ணன், 50. (படம்).
தேசத்துக்கான கடமைக்காகவும் சேவைக்கான அர்ப்பணிப்புக்காகவும் மொத்தம் 758 பேருக்கு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் இணைந்து மே 31ஆம் தேதியன்று நடைபெற்ற தற்காப்பு அமைச்சின் தேசிய தின விருது நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கின.
இளம் வயதில் என்ன வேலைக்குச் செல்வது என்று தெரியாமல் பாலர்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய உமாதேவி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வேறு வாழ்க்கைத்தொழிலுக்கு மாறலாம் என்ற முடிவை எடுத்தார்.
பொருத்தமான வாழ்க்கைத்
தொழில் பற்றி தெரிந்துகொள்ள பல பயிலரங்குகளுக்குச் சென்ற இவரின் ஆர்வத்தைத் தூண்டியது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை பயிலரங்கு.
உயர்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் காவல்துறை படையிலும் பலவித நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற உமாதேவி, ஆரோக்கிய வாழ்க்கை
முறையைக் கடைப்பிடிக்க விரும்பினார். ஆகாயப்
படையில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதால் அவர் அதில் சேர்ந்தார்.
தமது 25 ஆண்டு காலப் பயணத்தில் பல புதிய சேவை அனுபவங்களைப் பெற்ற உமாதேவியிடத்தில் 'பீஸ் வான்கார்ட்' எனப்படும் பணியில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
"அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமெரிக்க ஆகாயப்படையினருடன் இணைந்து பணிபுரிந்ததன் வழி பல புதிய திறன்களை நான் கற்றுக்கொண்டேன்.
"அவர்களுடன் திட்டங்களில் ஈடுபட்டிருந்த அதே சமயத்தில் எனது கணவரும் பிள்ளைகளும் என்னோடு அமெரிக்காவுக்கு வந்திருந்ததால் அவர்களுடனும் என்னால் நேரம் செலவிட முடிந்தது" என்கிறார் அவர்.
ஆகாயப்படைக்காக அதிக நேரத்தை ஒதுக்கிய உமாதேவி, அதே நேரத்தில் ஒரு குடும்பத்தலைவியாகவும் தாயாகவும் தனது கடமைகளைச் செய்வதற்கு சிரமப்பட்டதையும் கூறினார்.
"ஆகாயப்படையில் வீராங்கனை யாகப் பணிபுரியும் அதேநேரத்தில் எனது இரு மகன்களைக் கவனித்துக் கொள்ளும் கடமையும் எனக்கு உண்டு. சில சமயங்கள் இரண்டையும் சமாளிக்க கடினமாக இருந்தாலும் எனது கணவரும் எனது குடும்பத்தினரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு உதவி, ஆதரவை அளிக்கின்றனர். அதனால்தான் என்னால் இந்தச் சேவையை ஆற்றமுடிகிறது." என்றார் உமாதேவி.

