கடந்த 38 ஆண்டுகளாக இந்திய மாணவர்களின் கல்விக்காக ஆதரவு நல்கிவரும் உமறுப் புலவர் கல்வி உபகாரச் சம்பள அறங்காவல் நிதி, இவ்வாண்டு 16 மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்ய முற்படுகிறது.
உமறுப் புலவர் கல்வி உபகாரச் சம்பள அறங்காவல் நிதியின் 2022-23 கல்வி ஆண்டுக்கான வட்டியில்லாக் கல்விக் கடன் மற்றும் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 26 ஞாயிற்றுக்
கிழமை சிண்டா கட்டடத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் விளம் பரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான வட்டியில்லாக் கல்விக்கடனுக்கும் கல்வி உதவிநிதிக்கும் 16 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் அறுவர் பட்டப் படிப்புக்கும் ஐவர் பட்டயப் படிப்புக்கும் மேலும் ஐவர் தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) படிப்புக்கும் விண்ணப்பித்து இருந்தனர்.
தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு $33,000 கல்விக்கடன் மற்றும் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
இந்தத் தொகையில், பட்டப் படிப்புக்கு தலா $3,000, பட்டயப் படிப்புக்கு தலா $2,000 வட்டியில்லாக் கல்விக்கடனும் தொழில்நுட்பக் கல்விக்கழகப் படிப்புக்கு தலா $1,000 கல்வி உதவிநிதியும் வழங்கப்பட்டது.
அத்துடன், 18ஆம் ஆண்டாக சிண்டா வழங்கும் வருடாந்திர கல்வி உதவி நிதிக்காக 5,000 வெள்ளி நன்கொடையாகத் தரப்பட்டது. இவ்வாறு, மொத்தம் $38,000 நிதி உதவியாக அளிக்கப்பட்டது.
மாலை 5 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உமறுப் புலவர் கல்வி உபகாரச் சம்பள அறங்காவல் நிதியின் தேர்வுக்குழுத் தலைவர் திரு எஸ். விவேகானந்தன், மாணவர்களுக்குக் காசோலைகளை வழங்கினார். சிண்டாவுக்கான நன்கொடை நிதியை சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 35 பேர் கலந்துகொண்டனர்.
"மேற்கல்வி படிப்பதற்கு நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவி செய்வதே எங்களது தலையாய பணி," என்றார் அறங்காவல் நிதியின் பொருளாளர், திரு காதர் சுல்தான், 78.
மேலும் அவர், "திரு அ.நா. மைதீன் தொடங்கிய தென்கிழக்காசியாவின் ஒரே தமிழ் உயர்
நிலைப்பள்ளியான உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி 1982ஆம் ஆண்டு மூடப்பட்டது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையோடு பள்ளியிலிருந்த இருப்புத் தொகையையும் கொண்டு உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி 1985ல் அமைக்கப்பட்டது. படிக்கும் காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் இவ்வுதவி நிதியைப் பெற மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதுவரை கிட்டத்தட்ட 350 மாணவர்கள் கல்விக்கடனுதவியும் 130 மாணவர்கள் கல்வி உதவி நிதியும் பெற்று பயனடைந்துள்ளனர்," என்று கூறினார்.
அறங்காவல் நிதிக்கு ஆண்டுதோறும் $1,000 நன்கொடை வழங்கும் திரு சிவா கோவிந்தசாமி, 47, என்பவர் கூறுகையில், "உமறுப் புலவர் அறங்காவல் நிதி வழங்கிய வட்டியில்லாக் கடன் எனது பட்டப்படிப்புக்குத் தேவையான கட்டணங்களைச் செலுத்த பேருதவியாக இருந்தது. வசதியற்ற குடும்பத்திலுள்ள மற்ற மாணவர்களும் என்னைப்போல் பயனடையவேண்டும் என்ற நோக்கத்தில் என்னால் இயன்ற நிதியை வழங்குகிறேன்," என்றார்.
வற்றிப்போன வசதி; தொற்றிக்கொண்ட வறுமை - இவற்றுக்கிடையே கற்றுக்கொண்டு படிப்பது எப்படி. வசதிகுறைந்த மாணவர் பலரின் இந்தக்
கேள்விக்கு விடையாக, 'நானிருக்கிறேன்' என ஆதரவுக்கரம் விரிக்கிறது அறங்காவல் நிதி ஒன்று.