கொவிட்-19 கிருமித்தொற்று காலகட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மூத்த தலைமுறையினரின் நிலையை கண்முன் காண்பிக்க முயன்றது அவாண்ட் நாடகக்குழுவின் '4ஜி' நாடகம். நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ள இந்நாடகத்தின் கதை முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் ஐந்து முதியவர்களைச் சுற்றி நகர்கிறது.
இவர்கள் கொவிட்-19 தொடர்பான சுகாதார விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எப்படி தங்களை பழக்கப்படுத்திக்கொள்கின்றனர், நோய் பரவலால் அங்கு ஏற்படும் மாற்றங்களை அவர்களது குடும்பத்தினர் எப்படி சமாளிக்கின் றனர் ஆகியன நாடகத்தின் முக்கிய அங்கங்கள். இக்காட்சிகளை தத்ரூபமாக மேடையேற்றியதே நாடகத்தின் வெற்றி. நாடகத்தின் மையமாக ஐந்து கதாபாத்திரங்களில் நடித்துள்ள மூத்த நாடகக் கலைஞர்களான திருமதி சித்ரா தேவி செல்வலிங்கம், திருமதி சண்முகம் முத்துலட்சுமி, திரு லிங்கம், திரு லோகன் பொன்னுசாமி, திரு அகமது அலி கான் ஆகியோரின் பல்லாண்டு கால நாடக அனுபவத்தையும் திறமையையும் இந்நாடகம் வெளிக்கொணர்ந்தது. துணை நடிகர்கள் பலர் வந்து வந்து போனாலும், இந்த ஐவரே பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தனர்.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளிவந்த தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற அதே விதமான நகைச்சுவையை இளையோரைக் காட்டிலும் பெரியவர்கள் அதிகமாக ரசித் தனர். ஆயினும், நாடகத்தின் இறுதியில் எல்லாரையும் சிரிக்க வைத்தார் ச. வடிவழகன்.
"கொவிட்-19 நோய்ப் பரவல் பற்றி ஒரு நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்ற ஆவல் தமக்கு எழுந்ததாகக் கூறினார் நாடகத்தின் எழுத்தாளர் முனைவர் உமையாள் திருச்செல்வம்.
'giving.sg' இணையத்தளத்தின்வழி திரட்டப்பட்டிருந்த நன்கொடையின் ஆதரவுடன் அரங்கேறிய நாடகத்தைக் காண ஸ்ரீ நாராயண மிஷன், சன்லவ் ஹோம், மோண்ட் ஃபர்ட் கேர், @27 குடும்ப சேவை மையம் ஆகிய இல்லங்களிலிருந்து முதியோர் வந்திருந்தனர்.
"சிங்கப்பூரில் நாங்கள் மேடை நாடகம் நடத்த காரணம் இங்குள்ள அற்புதமான நடிகர்கள், குறிப்பாக முன்னோடிகள். அவர்களின் உத்வேகம், ஊக்கம், அன்பு ஆகியவைதான் இந்த முயற்சியின் உந்து சக்தியாகும்," என்றார் '4ஜி' நாடகத்தின் இயக்குநர் திரு க செல்வா.
"என்னைப் போன்ற மூத்த கலை ஞர்கள் புதுமுகங்களுடன் சேர்ந்து நடித்ததில் பெருமை கொள்கிறேன்," என்றார் பிரதான கதாபாத்திரத்தில் தோன்றிய முத்துலட்சுமி, 74.
அவரது மகனாக நடித்த தனராம் கூறுகையில், "சிறு வயதிலிருந்து நாடகங்களில் பார்த்து ரசித்த மூத்த கலைஞர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடவுள் அருளால் எனக்குக் கிடைத்தது," என்றார்.

