ஹர்ஷிதா பாலாஜி
யோகா பயிற்சி உடலையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சிறந்த வழிமுறை என்று பலராலும் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் பல யோகாசனப் பயிற்சி நிலையங்கள் இருந்தாலும், வேதாத்திரி மகரிஷி எளியமுறை குண்டலினி யோகா நிலையத்தைப் போன்ற ஒரு சில அமைப்புகள் மட்டுமே இலவசமாக இந்த யோகாசனப் பயிற்சிகளைப் பொதுமக்களுக்குக் கற்றுத்தருகின்றன.
உடல்நலம், மனவளம், குணநலம், நட்பு நலம், பிரம்ம ஞானம் ஆகிய ஐந்து கூறுகளைக் கற்றுத் தருகிறது வேதாத்திரி மகரிஷி எளியமுறை குண்டலினி யோகா (விஎம்ஸ்கை) அமைப்பு.
1997ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் இது இயங்கி வருகிறது.
தற்போது சிங்கப்பூரில் இவ்வகை யோகாவைக் கற்றுத்தரும் நான்கு அமைப்புகளில் ஆக அதிக காலம் இயங்கி வரும் அமைப்பு என்ற சிறப்பு 'விஎம்ஸ்கை' அமைப்பைச் சாரும்.
யோகாசனப் பயிற்சிகளை கட்டணமின்றி அனைத்து வயதினருக்கும் இது கற்றுத் தருகிறது.
இதன் பயிற்சி வகுப்புகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் யோகாவைக் கற்றுக்கொண்டு பலனடைந்திருப்பதாகக் கூறினார் 'விஎம்ஸ்கை' அமைப்பின் தலைவர் மு. விசுவலிங்கம்.
"உடலைப் பேணிக் காப்பது எப்படி என்று கற்றுக்கொள்வதுடன் குடும்பத்தை, நண்பர்களை, சுற்றுச்சூழலை அனுசரித்துச் செல்லவும் இத்தகைய பயிற்சிகள் கைகொடுக்கின்றன.
"சமுதாயத்துக்குப் பங்காற்றும் விதத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் எங்கள் அமைப்பில் கற்றுக்கொடுக்கிறோம்" என்றார் 70 வயதாகும் திரு விசுவலிங்கம்.
1911ஆம் ஆண்டில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்களின் அடிப்படையில் இங்கு யோகாவை கற்றுக்கொடுக்கும் நான்கு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிங்கப்பூர் உட்பட மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் 'விஎம்ஸ்கை' இயங்கி வருகின்றது என்ற தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
எளியமுறை குண்டலினி யோகா (ஸ்கை), சிங்கப்பூர் தியான மையம், சுப்ரீம் குண்டலினி யோகா ஆகியவை மற்ற மூன்று அமைப்புகள்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் இவற்றில் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இத்துடன் நன்கொடை பற்றாக்குறையையும் சந்திப்பதால் இவை தற்காலிகமாக யோகா வகுப்புகளை நிறுத்தியுள்ளன என்றும் 'விஎம்ஸ்கை' அமைப்பு மட்டுமே தொடர்ந்து இயங்கிவருவதாகவும் திரு விசுவலிங்கம் குறிபிப்ட்டார்.
ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரையும், மாலை ஆறிலிருந்து எட்டு மணி வரையும் இரு வேளைகளிலும் பொது யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உட்லாண்ட்ஸ் 11 கட்டடத்தில் அமைந்துள்ள 'சிங்கப்பூர் அறிவு திருக்கோயிலில்' இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன.
பொது வகுப்புகளைத் தவிர, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலையில் பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள் இடம்பெறுகின்றன. மேலும் சனிக்கிழமைகளில் சிறப்புத் தேவையுடைய சிறுவர்களுக்கு யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இரு வகுப்புகளுமே அறிவுத்திருக்கோயிலில் நடத்தப்படுவதாகக் கூறினார் திரு விசுவலிங்கம்.
முற்றிலும் நன்கொடை அடிப்படையில் இயங்கி வரும் இந்த அமைப்பில் தியானம், அகத்தாய்வு ஆகிய சிறப்புப் பயிற்சிகளுக்கும் யோகாசனப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட விரும்புவோருக்கு வழங்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தவேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக இவ்வமைப்பில் ஈடுபட்டு வருவதால் நான் என் வாழ்க்கையில் பல பயனுள்ள மாற்றங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறேன், மற்றவர்களும் இதுபோன்ற அமைப்புகளைப் பற்றித் தெரிந்துகொண்டு என்னைப்போல் பயனடையவேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார் திரு விசுவலிங்கம்.

