எஸ். விக்னேஸ்வரி
கரடுமுரடான பாதைகள், வசதி ஏதும் இல்லாத கூடாரத்தில் இரவுகளைக் கழிக்க வேண்டிய நிலை, இவை எதுவும் 24 வயதான விகாஸ் எத்திராஜின் பயணக் கனவைக் கலைக்கவில்லை.
உலகைச் சுற்றிவருவது இவரது நெடுநாள் ஆசை. ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்பினார். எனவே சைக்கிளில் உலகத்தை வலம்வர முடிவெடுத்தார் இவர்.
கனவு காண்பதோடு நின்றுவிடாமல் தனது ஆசையை நிறைவேற்றும் முதல்படியாக பொறியாளர் வேலையிலிருந்து விலகினார்.
காடு, மேடு, பள்ளம், மலை, மணல், வயல், சேறு எனப் பல்வேறு நிலப் பரப்புகளில் பயணம் செய்யவேண்டி வரும் என்பதால் 'மவுண்டன்' சைக்கிளை வாங்கிக் கொண்டார். சென்ற ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.
இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்து நேப்பாளத்தைச் சென்றடைந்தார். அங்கிருந்து மியன்மார், கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா என 8,000 கிலோமீட்டர் தொலைவை சைக்கிளில் கடந்து, சென்ற ஜூன் 19ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தார்.
இது இவரது கனவுப் பயணத்தில் ஓர் அத்தியாத்தின் நிறைவு மட்டுமே. உண்மையில் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ஆஸ்திரேலியா சென்று பின்னர் அங்கு மீண்டும் சைக்கிள் பயணத்தைத் தொடர்வது இவரது திட்டம். ஆனால் இது சாத்தியப்படவில்லை.
"முறையாகத் திட்டமிடாமல் இந்த பயணத்தைத் தொடங்கிவிட்டேன். சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கான அனுமதியைப் பெற போதிய கால அவகாசம் இல்லை. இப்போதைக்கு இங்கே பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறேன்," என்றார் விகாஸ்.
திறன்பேசி, புகைப்படக் கருவி, ஒலி வாங்கி போன்ற வெவ்வேறு கருவிகளே தனது பயணத்தின் உற்ற நண்பர்கள் எனக் கருதும் விகாஸ், இவை இல்லாவிட்டால் இவ்வளவு தொலைவு பயணம் செய்திருக்க முடியாது என்றார்.
"பல நாடுகளைச் சுற்றிவருவதற்கு தொலைபேசியும் 'ஜிபிஎஸ்' தொழில்நுட்பமும் இரண்டு கண்கள்.
"அந்தக் காலத்தில் வரைபடத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலர் சைக்கிளில் உலகத்தை வலம்வந்தனர். அதுதான் பெரிய சவால். இப்போதெல்லாம் இது மிக எளிது. தொழில்நுட்ப உதவி இருப்பதால் தொலைந்துபோக வாய்ப்பில்லை," என்றார் இவர்.
பெற்றோர் முதலில் விகாஸின் ஆசையைப் புரிந்துகொள்ளவில்லை; இவரது பாதுகாப்பு குறித்த கவலையில் இந்தக் கனவுப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். விகாஸ் சளைக்காமல் முயற்சி செய்யவே விட்டுக்கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
பயணத்துக்காக ஓரளவு பணம் சேமித்து வைத்திருந்தாலும் அது போதுமானதாக இருக்குமா என்ற கவலையை மறுப்பதற்கில்லை என்றார் விகாஸ்.
"என் பயணத்தில் வெவ்வேறு நாடுகளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்தேன். 100,000க்கும் மேற்பட்டவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர். கிட்டத்தட்ட 105,000 பேர் 'யூடியூபில்' என் காணொளிகளைப் பார்க்கின்றனர்.
"இதனால் எனக்கு மாதம் 8,000லிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை ($170) வருமானம் கிடைக்கிறது. சிக்கனமாகச் செலவு செய்வதால் என் அன்றாடச் செலவுகளுக்கு இது போதுமானதாக இருந்தது," என்றார் விகாஸ்.
"நான் கடந்த எட்டு மாதங்களாக இதுவரை செல்லாத பல நாடுகளுக்குச் சென்றேன். மொழி தெரியாது, நண்பர்கள் கிடையாது,
"இருப்பினும் சென்ற இடத்தில் எல்லாம் எனக்கு, கேட்காமலே உதவி கிடைத்தது. அந்நியர்கள் வீட்டுக்கு அழைத்து சாப்பிட வைத்தார்கள்; தங்களால் முடிந்த மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தார்கள். பெயர் தெரியாத சிலர் பணம் கொடுத்தும் உதவினார்கள். உலகத்தில் இன்னும் நல்லவர்கள் இருப்பதை இந்தப் பயணம் எனக்கு உணர்த்தியது", என்று பெருமிதத்துடன் கூறினார் விகாஸ்.
"நான் பார்த்ததை, அனுபவித்ததைப் பணம் கொடுத்துப் பெறமுடியாது. என் வாழ்நாள் வரை இந்த நினைவுகள் என்னுடன் இருக்கும்," என்று கூறுகிறார் விகாஸ்.
சென்னையில் சற்று ஓய்வெடுத்த பின்னர் இவ்வாண்டுக்குள் மீண்டும் சைக்கிள் பயணத்தைத் தொடங்குவது இவரது திட்டம். இதில் ஆஸ்திரேலியாவை வலம்வருவது இவரது விருப்பம்.

