ஹர்ஷிதா பாலாஜி
பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்த தனிஷா மதியழகன், 25, அடுத்தகட்டமாக வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணி பல நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்து இருந்தார். அப்போதுதான் தடயவியல் தொழில்நுட்ப அதிகாரிக்கான வேலைவாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
பிணவறையில் பணிபுரிந்து மரண விசாரணை அதிகாரியுடன் இணைந்து உடற்கூராய்வுகளைச் செய்த தனிஷாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மரணம் சார்ந்த தொழிலின்மீது ஈடுபாடு ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வேலையைவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கியபோதும் மரணம் சார்ந்த துறையில் தொடர்ந்து பணிபுரிய விழைந்த இவருக்கு சடலங்களைப் பதப்படுத்தி வைப்பது (எம்பாமிங்) பற்றிக் கற்றுக்கொடுக்க வழிகாட்டி ஒருவர் முன்வந்தார்.
தற்போது சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு 'டைக்னாஸ்டிக் ரேடியோகிராஃபி' பயிலும் தனிஷா, கடந்த ஒன்றரை ஆண்டாக பகுதிநேர 'எம்பால்மராகவும்' பணிபுரிந்து வருகிறார்.
இறந்தவர்களின் உடல்களைச் சுத்தம் செய்து, பதப்படுத்தி, அவற்றைச் இறுதிச் சடங்கிற்கு தயார்ப்படுத்துவதே ஒரு 'எம்பால்மராக' தனிஷா செய்ய வேண்டிய பணிகள்.
"எனது பெற்றோர் ஆரம்பகாலத்தில் நான் 'எம்பாமிங்' செய்வதை விரும்பவில்லை. ஆனால், என் ஆர்வத்தைத் தடுக்க முடியாது என்றும் அவர்களின் சொல்லுக்கு அடங்கி 'எம்பாமிங்கை' கைவிட மாட்டேன் என்றும் உணர்ந்த என் பெற்றோர், நான் செய்வதைத் தடுக்கவில்லை," என்று தனிஷா கூறினார்.
இதுவரை ஏறக்குறைய 300 உடல்களைப் பதப்படுத்தி வைத்து உள்ள இவர், ஓர் 'எம்பால்மராக' உடல்களைப் பதப்படுத்த அவற்றை நகர்த்தவும் தூக்கவும் அதிக சக்தி தேவைப்படும் என்பதைத் தாம் எதிர் பார்க்கவில்லை என்றார். ஆனால், குத்துச்சண்டை வீராங்கனையான தனிஷாவுக்கு இது எளிதில் பழகிவிட்டது.
அதே நேரத்தில், வேலை பற்றி எழும் பல கேள்விகளை தனிஷா சமாளிக்க வேண்டியுள்ளது.
"நான் 'எம்பால்மராக' பணிபுரிகிறேன் என்று கூறினால், அப்படியென்றால் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால், இந்த வேலையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள பலரும், குறிப்பாக இளையர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே, நான் ஏன் இந்த வேலையைச் செய்கிறேன்? வேறு வேலையே இல்லையா?" என்று கேட்பதாக தனிஷா சொன்னார்.
"ஒருவர் எப்போது இறந்துபோவார் என்று சொல்ல முடியாது. எனவே, எப்போது உடல் கிடைக்கிறதோ அப்போது என் முதலாளி உடலைப் பதப்படுத்தி வைக்க என்னை வேலைக்கு அழைப்பார். அப்போது நள்ளிரவாக இருந்தாலும் அதிகாலையாக இருந்தாலும் நான் வேலைக்குச் செல்ல வேண்டும்," என்றார் தனிஷா.
குறிப்பாக, கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைப்பது, இறுதிச் சடங்கின்போது இறந்தவர்களுக்கு நெருக்கமானவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு உதவும் என்றும் இவர் கூறினார்.
"மரணம் அடைந்தவர்களைக் கையாளும் வேலை துக்கம் நிறைந்தவையாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், இந்தத் துறையில் பணிபுரிவதால், குறிப்பாக ஒரு 'எம்பால்மராக' பணிபுரிவதில் எனக்கு அதிக மனநிம்மதி கிடைக்கிறது. ஏனென்றால், இறந்தவர்கள் பேசமாட்டார்கள், குறைகூறமாட்டார்கள்," என்று புன்னகைத்தவாறு கூறினார் தனிஷா.
இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்துபவர்கள் என்ன செய்வார்கள்?
1) இறந்தவரின் உடல் வந்தவுடன், சடலத்தின் கழுத்திற்கு அருகிலுள்ள ரத்தக் குழாய் வழியாக 'பார்மலின்' என்ற வேதிப் பொருளை உடலில் செலுத்த, கழுத்துப் பகுதியை தனிஷா அறுப்பார்.
2) அதன் பிறகு, உடலிலுள்ள ரத்தத்தை வடிக்க சடலத்தின் வயிற்றுப் பகுதியை அறுத்து, 'ட்ரோகார்' என்ற நீளமான ஊசியின் உதவியோடு ரத்தத்தை வடிப்பார் தனிஷா.
3) ரத்தத்தை வடித்து வேதிப்பொருளை உடலில் செலுத்தியபின் அறுக்கப்பட்ட பகுதிகளில் தனிஷா தையல் போடுவார். அதன் பிறகு, சடலம் மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்யப்படும்.
4) இறுதியாக, இறந்தவருக்காக கொடுக்கப்படும் ஆடை, அணிகலன்களை அணிவித்து சடலத்துக்குத் தேவையான அளவு ஒப்பனை செய்வார் தனிஷா.

