போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லம் அதன் தோட்டக்கலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம், இரண்டாம் கட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
ஆஷ்ரமத்தில் வசிக்கும் இல்லவாசிகளின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2017ல் தோட்டக்கலைத் திட்டம் தொடங்கப்பட்டது.
"போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரால் அவ்வளவு எளிதாக போதைப்பொருள் உட்கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆஷ்ரமத்தைவிட்டு வெளியேறிய பிறகும் அவர்கள் போதைப்பொருள் பக்கம் திரும்பாமல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க தோட்டக்கலை போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உதவுகின்றன," என்றார் ஆஷ்ரமத்தின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.விஜய்குமார்.
தோட்டக்கலைத் திட்டத்தின் முதல்கட்டமாக ஆஷ்ரமத்தின் இல்லவாசிகளும் ஊழியர்களும் இணைந்து செடி கொடிகளை வளர்ப்பதில் ஈடுபட்டனர்.
தோட்டக்கலையில் ஈடுபட்ட இல்லவாசிகளின் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் மேம்பட்டதை அடுத்து, அரசாங்க அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அடித்தள, சமூக அமைப்புகளும் தோட்டக்கலைத் திட்டத்தை ஆதரிக்க முன்வந்தன. இதனால், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது.
தோட்டக்கலைத் திட்டத்தின் நிலைத்தன்மையையும் தொடர்புத்தன்மையையும் உறுதிப்படுத்த 'எடிபல் கார்டன் சிட்டி' (இஜிசி) தனியார் நிறுவனம் ஆஷ்ரமத்துடன் இணைந்து நகர்ப்புற விவசாய மாதிரியை உருவாக்கியது.
இம்மாதிரியின் கீழ், மூலிகைகளையும் காய்கறிகளையும் வளர்க்க ஆறு புதிய பசுமை வீடுகள் தோட்டத்தில் அறிமுகம் கண்டன.
அதே நேரத்தில், விவசாயம், தோட்டக்கலை, தோட்ட அமைப்பு ஆகிய துறைகளில் பணிபுரிய 11 முன்னாள், இந்நாள் இல்லவாசிகளை பயிற்றுவித்தது 'இஜிசி' நிறுவனம்.
தோட்டக்கலை, தோட்ட அமைப்பு பயிற்சியைச் சிறப்பாக செய்து முடித்த இல்லவாசிகள் ஒன்பது பேருக்கு திரு தர்மன் சான்றிதழ்களை வழங்கினார்.
"தோட்டக்கலையின் வழியாக பெறும் திறன்களை இல்லவாசிகள் வெளியே வேலை தேடுவதற்கு பயன்படுத்தவில்லை என்றாலும், மனநலனை மேம்படுத்தும் ஒரு பொழுதுபோக்கைக் கடைப்பிடிக்க அவை உதவும். முன்னாள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க இதுபோன்ற ஆக்கபூர்வமான வழிகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்," என்றார் அமைச்சர் தர்மன்.
சான்றிதழ்களைப் பெற்ற இல்லவாசி ஒருவர், கடந்த ஆண்டில் இருந்து தோட்டக்கலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
"எனக்கு 1970களில் இருந்தே தோட்டக்கலையில் ஆர்வம் இருந்தது. ஆனால், சென்ற ஆண்டு ஆஷ்ரமத்தில் சேர்ந்த பிறகே என்னால் அதில் கவனம் செலுத்த முடிகிறது. இப்போது, இத்திட்டத்தின் வழியாக எனக்குப் பிடித்ததை செய்வதோடு மனநலனையும் பேணி வருகிறேன்," என்றார் அந்த இல்லவாசி.
செய்தி: ஹர்ஷிதா பாலாஜி

