சிங்கப்பூர் இந்தியர் சங்கம் அதன் 99ஆம் ஆண்டுநிறைவை ஒட்டியும் தேசிய தினத்தை முன்னிட்டும் அடுத்த மாதம் ஐந்து நாள் விளையாட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
'ஐஏ ரெட் டாட்' விளையாட்டு விழா, எண் 69, பாலஸ்டியர் ரோட்டில் அமைந்துள்ள இந்தியர் சங்கத்தின் விளையாட்டுத் திடலில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும்.
காற்பந்து, கிரிக்கெட், ஹாக்கி ஆகியவற்றுடன் ஃபுட்சால், கபடி, திடல்தடப் போட்டிகளும் நடைபெறும். யோகாசனம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய இந்தியக் கலைகளின் நுணுக்கங்களை வல்லுநர்கள் நேரடியாகச் செய்துகாட்டுவர்.
இந்த விழாவின் நோக்கங்கள் இரண்டு என்றார் சங்கத் தலைவர் தமிழ் மாறன்.
முதலாவது, இந்தியச் சமூகத்தினரிடையே உடலுறுதி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை ஊக்குவிப்பது. அடுத்தது, உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் மூலம் மேம்படுத்துவது.
பாலஸ்டியர் ரோட்டில் உள்ள சங்கத்தின் கட்டடமும் அதன் விளையாட்டுத் திடலும் தங்கள் மரபுடைமையின் சின்னங்கள் என்றார் திரு தமிழ் மாறன்.
இந்தியர் சங்கம் 1923ஆம் ஆண்டில், உறுப்பினர்களின் சமூக, மதிநுட்ப, கலாசார நலன்கள் உள்ளிட்டவற்றை செம்மைப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் இந்திய இளையர்கள் ஒன்றுகூடவும், கிரிக்கெட், டென்னிஸ், பில்லியர்ட்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடவும் வாய்ப்பளித்த புகழ்பெற்ற இடமாக விளங்கியது.
1950, 1960களில் வட்டார, அனைத்துலகப் போட்டிகளில் சங்கத்தின் கிரிக்கெட், டென்னிஸ் குழுவினர் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தனர்.
ஹாக்கி குழு 1956ஆம் ஆண்டு மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் சார்பில் களமிறங்கியது. இன்றைய காலகட்டத்திலும் இந்தியர் சங்கத்தின் கிரிக்கெட் அணி, சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளில் வெற்றிபெற்றுவருகிறது.
கடந்த ஈராண்டாக கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக இந்தியர் சங்கத்தின் நடவடிக்கைகள் குறைந்தபோதும், மீண்டும் காற்பந்து, ஹாக்கி, கபடி, திடல்தடப் போட்டிகள் போன்றவற்றில் இளையர்களை ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தலைவர் தமிழ் மாறன் குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டு விழாவில் 700க்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர் சங்கம் அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய இந்த விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், இந்த விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.