சிங்கப்பூரில் வேலையிட மரணங்கள் அதிகரித்துள்ளதால் அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும், தண்டனைகளை அதிகரிக்க வேண்டும் என்ற அழைப்பு ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
திருமதி தீபா சுவாமிநாதனைப் பொறுத்தவரை பாதுகாப்பு குறைபாடுகளுக்கான தண்டனை அதிகரித்தால் நிலைமை மாறும் என நம்புகிறார். அபராதம் போதுமானதாக இல்லை, அந்த அபராதத்தையும் வியாபாரச் செலவுகளில் ஒன்றாகக் கழித்துவிடலாம் என்கிற நிலையில் முதலாளிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்கிறார்.
இத்தகைய அழைப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் செவிசாய்த்துள்ள மனிதவள அமைச்சு, பாதுகாப்புச் சோதனைகளின்போது கண்டுபிடிக்கப்படும் குற்றங்களுக்கான அபராதங்களை இரட்டிப்பாக்கியிருக்கிறது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்ட மீறல்களுக்கான குற்றப் புள்ளிகளையும் அமைச்சு மறுபரிசீலனை செய்து வருகிறது.
அந்தச் சட்டத்தின் கீழ் ஊழியர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உறுதிப்படுத்துவது நிறுவன இயக்குநர்களின் பொறுப்பாகும். விபத்துகளையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, துவாஸ் வேலையிடத்தில் வெடிப்பு ஏற்பட்டதில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஏழு பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் உள்ளூரின் 'ஸ்டார்ஸ் இன்ஜினியரிங்' நிறுவனத் தின் ஒரே உரிமையாளரான சுவா ஸிங் டா, அந்நிறுவனத்தின் உற்பத்தி நிர்வாகி லிவின் மோ டுன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுவா, 38, இரண்டு குற்றச்சாட்டு களை எதிர்நோக்கினார். ஊழியர் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமையிலிருந்து தவறியது அவற்றில் ஒன்று, வேலையிடத்தில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பாதுகாப்பானது என்பதை உறுதிப் படுத்தத் தவறியது மற்றொன்று. விசாரணை அதிகாரிகளிடம் அவர் பொய்களை சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் நீதித் துறை நடவடிக்கைகளை தடுத்த குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
இவர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபணமானால் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 200,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உற்பத்தி நிர்வாகியான திரு லிவின் மோ டுன் 32, மீது வேலையிடத்தில் கவனக்குறைவாக இருந்து தனக்கும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் ஆபத்தைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களை மீறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இது, நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 30,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆனால் விபத்துக்கான மூல காரணங்களைச் சமாளிக்க தண்டனைகள் மட்டும் போதாது என் கிறார் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் குமார்.
வேலையிடப் பாதுகாப்பை மேம் படுத்துவதைப் பற்றிய 2010ஆம் ஆண்டு புத்தகத்தில் பாதுகாப்பு நிபுணர்களான ஜுடி ஏக்நியூவும் அப்ரி டேனியலும் பாதுகாப்பு விதிமீறல் தண்டனைகளால் அச்சம், அவநம்பிக்கை கலாசாரம் உருவாகி தவறுகள் மறைக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உண்மை என்னவென்றால் தண்டனைகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்த அவர்கள், கடுமையான காயம் மற்றும் மரணங்களைவிட மோசமான தண்டனை எதுவும் இல்லை என்று கூறி இருந்தனர்.
சிங்கப்பூரும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதில் தண்டனைகளை மட்டுமே நம்பியில்லாமல் இதர வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் சுகாதார இலக்குகளுடன்கூடிய வர்த்தக நலன்களுக்கு வழிகாட்டும் கொள்கையை அது பின்பற்றுகிறது.
உதாரணமாக, வேலை தொடர்பான சாலை விபத்துகளைத் தவிர்க்க விநியோக நிறுவனங்களுடன் சேர்ந்து வேலை நடைமுறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
மனிதவள அமைச்சின் வர்த்தகக் கண்காணிப்பு திட்டம், தண்ட னைகளை வழங்குவதில் மட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சங்களை ஊக்குவிப்பதற்கான சலுகை களிலும் கவனம் செலுத்துகிறது.
மரணங்கள், வேலையிட விபத்துகளால் காயம், மோசமான பாதுகாப்பு போன்றவற்றைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் தண்டனை களுக்கு அப்பால் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டு வழி காட்டப்படுகின்றன.
மனிதவள அமைச்சின் கடுமையான மதிப்பீட்டுக்கு இத்தகைய நிறுவனங்கள் உட்படுத்தப்படுகின்றன. இதில் தவறினால் இவை நெருக்கமான கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுகின்றன. நிர்வாக முறைகளில் உள்ள குறைபாட்டை பகுப்பாய்வு செய்து ஒரு செயல் திட்டத்தை நிறுவனம் உருவாக்க வேண்டும்.
இந்த செயல் திட்டம் அமலாக்கப்படும் விதத்தை அமைச்சு கூர்ந்து கவனிக்கும். இதில் முன்னேறி வலுவான பாதுகாப்பு கலாசாரத்தை உருவாக்கிக் காட்டினால் திட்டத்திலிருந்து வெளியேற அனு மதிக்கப்படும்.
2007ஆம் ஆண்டிலிருந்து 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டன. ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி மனிதவள அமைச்சின் கண்காணிப்புப் பட்டியலில் 28 நிறு வனங்கள் இடம்பெற்றன.
அந்த வகையில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்ட கடமை களில் தலைமை நிர்வாக அதிகாரி களுக்கும் நிர்வாக சபை உறுப் பினர்களுக்கும் தெளிவான வழியைக் காட்டுவதற்காக இவ்வாண்டு இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை கோட்பாடும் வெளியிடப்படவிருக்கிறது.
தீர்ப்புகள், அபராதங்களைத் தீர்மானிக்கும்போது வழிகாட்டுதல்களை பின்பற்றாத முதலாளிக்கு எதிரான இந்த கோட்பாடுகளை நீதிமன்றங்கள் பயன்படுத்தலாம்.
ஊழியர்களுக்கும் தண்டனைகள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்தால் சலுகைகளை வழங்கலாம்.
'யுனிசன் கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தைச் சேர்ந்த திரு கோ, பாதுகாப்பு விதிகளை மீறும் ஊழியர்களைத் தண்டிக்கலாம். அதே சமயத்தில் ஊழியர் அணிக்கு பாதுகாப்பான இடத்தை உறுதிப்படுத்த உதவும் ஊழியர்களுக்கு வெகு மதிகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இதனால் ஊழியர்கள் தங்களுடைய வேலையில் பெருமிதம் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் என்றார் அவர்.
பாதுகாப்பற்ற நடைமுறைகளைப் பற்றி வெளிப்படையாக பேசும் ஊழியர்களுக்கு தாங்கள் தண்டிக்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் இருக்கக்கூடாது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் உதவி தலைமைச் செயலாளரும் ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான மெல்வின் யோங், பாதுகாப்பற்ற விவகாரங்கள் வெளிப்படுவதற்கான வழிகள் இருக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டபோது இந்தப் பிரச்சினையை சுட்டிக் காட்டியிருந்தார்.
ஊழியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில் தொழிற்சங்கத் தலைவர்களும் முக்கிய பங்காற்றலாம் என்று அவர் யோசனை கூறினார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் ஏதோ ஒரு வடிவிலான பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இதனால் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் சோதனைகளை நடத்தவும் அவர்கள் கைகொடுக்கலாம் என்று திரு யோங் மேலும் தெரிவித்தார்.
நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களை பொதுவில் வெளியிடுவது மனிதவள அமைச்சு எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகளில் ஒன்று. தற்போது கட்டுமானத் துறையில் மட்டும் இது பின்பற்றப் படுகிறது. இதர தொழில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
'ஹோம்' எனும் குடியேறும் பொருளியலுக்கான மனிதாபிமான அமைப்பு, வெளிநாட்டு ஊழியர் களுக்குப் புதிய வேலை தேடுவதற்கான சுதந்திரம் இருந்தால் வேலையிடப் பாதுகாப்புக்கு அது வழி வகுக்கும் என்று கூறுகிறது.
"அவர்களுக்கு வேலை பார்க்கும் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டால் தங்களுக்காகவும் சக ஊழியர்களைப் பாதுகாக்கவும் பேசுவார்கள். இறுதியாக ஆபத்தான வேலையை அவர்களால் விட்டுச் செல்லவும் முடியும். கடைசியாக அமலாக்க நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும்," என்றது ஹோம்.
அண்மையில் வேலையிட மரணங்கள், காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் அதிகரித்திருந்தாலும் மனிதவள நெருக்கடி தீர்ந்ததும் சிங்கப்பூர் வழக்கமான நல்ல சூழ்நிலைக்குத் திரும்பும் என பாதுகாப்பு நிபுணர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
"நாம் பின்னோக்கி பார்த்தால், சிங்கப்பூர் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளது. நாங்களும் எங்கள் தேசிய இலக்குடன் பயணிக்கிறோம். அதிலிருந்து விலக விரும்பவில்லை," என்கிறார் திரு சுரேஷ். "எங்களுடைய பாதையில் ஏராளமான சவால்கள் இருந்தாலும் அவை எங்களைத் தடுக்க முடியாது," என்றும் அவர் சொன்னார்.
(கட்டுரையாளர்: கோக் யுஃபெங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

