வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் மூடப்பட்டிருந்த உடலுறுதிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டது முதல் இவற்றுக்குப் படையெடுக்கின்றனர் உடலுறுதி பேண விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கட்டுப்பாடுகளை முன்னிட்டு மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தன உடலுறுதிக் கூடங்கள். தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, அங்கு செல்ல அனுமதி கிடைத்ததும் ஊழியர்கள் அதனை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சுந்தரேசன் தமிழ்ச்செல்வனுக்கு வயது 29. இவர் தங்கியிருக்கும் வெஸ்ட்லைட் ஜூனிபர் தங்குவிடுதியின் உடலுறுதிக் கூடத்தில் வாரத்தில் ஆறு நாள் விடாமல் பயிற்சி செய்கிறார். சென்னையில் இருந்து வந்துள்ள இவர் மின்சாதனங்களைப் பொருத்துதல், பழுதுபார்த்தல் தொடர்பான பணியில் உள்ளார்.
உணவுக் கட்டுப்பாட்டுடன் பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதாகவும் தமிழ்ச்செல்வன் கூறினார். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இவர் ஏறக்குறைய ஆறு கிலோகிராம் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட நடிகர் சூர்யா, அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஜான் செனா ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு தனது உடலை உறுதிசெய்ய முனைந்துள்ளார் இவர்.
வெஸ்ட்லைட் ஜூனிபர் தங்குவிடுதியைச் சேர்ந்த மற்றோர் உடலுறுதி ஆர்வலர் 31 வயது சாமிநாதன் ராமலிங்கம். கட்டுமானத் துறையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றும் இவர் அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்து சப்பாத்திகளை உண்பதாகக் கூறினார்.
தமிழகத்தின் வலங்கைமான் எனும் ஊரைச் சேர்ந்த இவர் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது உடலுறுதிக் கூடம் மூடப்பட்டிருந்ததால் உடற்பயிற்சி செய்ய இயலாதது பெருங்குறையாகவே இருந்துவந்தது. முன்னர் துவாஸில் உள்ள தங்குவிடுதியில் வசித்த இவர் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட்லைட் ஜூனிபர் விடுதிக்கு வந்தார்.
இவரும் வாரத்தில் ஆறு நாள், தவறாமல் உடலுறுதிக் கூடம் சென்று பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தைச் சிறந்த முறையில் பராமரிக்கத் தனது உடலை உறுதியாக வைத்துக்கொள்வது அவசியம் என்கிறார் ராமலிங்கம்.
சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கியபோது வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில்தான் பாதிப்பு அதிகம் இருந்தது. இதனால் மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் தங்குவிடுதிகளில் நீண்டகாலம் நடப்பில் இருந்தது.
வெஸ்ட்லைட் ஜூனிபர் உள்ளிட்ட பல தங்குவிடுதிகளில் உடலுறுதிக் கூடங்களும் வெளிப்புற விளையாட்டு இடங்களும் சுகாதாரப் பராமரிப்புக் கூடங்களாக மாற்றப்பட வேண்டிய சூழல் நிலவியது.
பின்னர் படிப்படியாக இந்த இடங்களில் மீண்டும் உடற்பயிற்சி, உடலுறுதி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்ச்செல்வன், ராமலிங்கம் இருவரைப் போலவே வெஸ்ட்லைட் மண்டாய் தங்குவிடுதியில் வசிக்கும் ஹூசேன் சஸாட், லியோ தங்குவிடுதியைச் சேர்ந்த நாத் டிபு காண்டி போன்றோரும் உடலுறுதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். மாதக்கணக்கில் மூடியிருந்த உடலுறுதிக் கூடங்களுக்கு மீண்டும் செல்ல வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்களது ஆர்வத்தைத் தூண்டும் விதமாக 'கேட் வாக்' எனப்படும் புதிய வடிவிலான ஆடைகளை அறிமுகப்படுத்தும் ஒய்யார நடை பயில வாய்ப்பளித்தது உள்ளூர் ஆடை வடிவமைப்பு நிறுவனமான பெஞ்சமின் பார்க்கர். இதில் சக்கைப் போடு போட்டனர் தமிழ்ச்செல்வன், ராமலிங்கம், ஹூசேன் மூவரும்.

