பொன்மணி உதயகுமார்
சிங்கப்பூரின் முக்கிய நான்கு இனங்களான சீனர்கள், மலாயக்காரர்கள், இந்தியர்கள், மற்ற சமூகத்தினர் என்ற பிரிவுகளுக்குள் உள்ள வெவ்வேறு சமூகங்கள் குறித்த அறிதலையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த 'சொஜோனர்ஸ்' எனும் விழா அண்மையில் இடம்பெற்றது. சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வு நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாவில் இசைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம் முதலியன இடம்பெற்றன.
சிங்கப்பூர் வரலாற்றிலும் மரபுடைமையிலும் பங்குபெறும் பல்வேறு சிறுபான்மைச் சமூகங்கள் குறித்தும் அவர்களது பங்களிப்பையும் முதல் நாள் நடைபெற்ற விரிவுரைக் கருத்தரங்கம் எடுத்துரைத்தது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத் தலைவரின் ஆலோசகரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகித்த முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் யாகூப் இப்ராஹிம் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"பல்லின ஒற்றுமைக்காக ஒவ்வோர் இனமும் சகிப்புத்தன்மையோடு வாழுகிறது என்ற எண்ணம் பிழையானது. இன நல்லிணக்கத்தைப் பேண நாம் ஈடுபடும் செயல்கள் நாம் செலுத்தும் காணிக்கை," என்றார் அவர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சையத் ஃபரீட் அல் அத்தாஸ், ஆர்மீனிய தேவாலயத்தின் அமி உமேத்யான், கவிதா கரும்பாயிரம் ஆகியோர் கருத்தரங்கில் முறையே அரேபியச் சமூகம், ஆர்மீனிய சமூகம், தமிழ்ச் சமூகம் ஆகியவை குறித்துப் பேசினர்.
கருத்தரங்கில், சிங்கப்பூருக்கு அக்காலத்தில் வர்த்தகர்களாக வந்த அரேபியர்கள் விற்பனைக்கிருந்த நிலங்களில் 75 விழுக்காட்டு நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருந்ததைப் பேராசிரியர் ஃபரீட் பகிர்ந்துகொண்டார். சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு அவர்களின் பங்களிப்பை அவர் விவரித்தார்.
சிங்கப்பூரில் மிகச் சிறிய சமுதாயமான ஆர்மீனிய சமூகத்தைப் பற்றிப் பேசிய அமி சிங்கப்பூரின் ஆரம்ப கால வரலாற்றில் ஆர்மீனியர்களின் பங்கை விளக்கிக் கூறினார். எடுத்துக்காட்டாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் நிறுவனர்களில் ஆர்மீனியர் ஒருவரும் இடம்பெற்றிருந்ததை அவர் சுட்டினார்.
தமிழ்ச் சமூகம் குறித்துப் பேசிய கவிதா கரும், இந்தியர்கள் என ஒட்டுமொத்தமாக அழைக்கப்பட்டாலும் இந்திய சமுதாயத்தில், மொழி, மதம் என்ற பிரிவுகளின்கீழ் பல்வேறு சமூகங்கள் இருப்பதை எடுத்துரைத்தார். தமிழ்ச் சமுதாயத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று பல சமயத்தவரும், இந்தியா, இலங்கை போன்ற வெவ்வேறு நாட்டு மக்களும் உள்ளடங்குவதை அவர் சுட்டினார். பல பிரிவுகள் இருந்தாலும் மொழியால் அனைவரும் தமிழர் எனும் ஒற்றை அடையாளத்தில் ஒன்றிணைந்திருப்பதை அவர் விளக்கினார். அடுத்த இரு நாள்களில் பல்வேறு சமய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

