'சிஃபாஸ்' எனப்படும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்திலும், மகாத்மா காந்தி நினைவரங்கத்திலும், இம்மாதம் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடந்தேறியது ஆத்ம அர்ப்பணம் எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி.
இதில் நடன ஆசிரியர் மாலிக்கா பணிக்கரின் மூத்த மாணவிகள் ஆதிரா உன்னித்தன், நித்தியலக்ஷ்மி குமரேசன், தனுஷ்ரி பாலசுப்பிரமணியம், உமா கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.
மாலிக்கா பணிக்கர் நிறுவிய நாட்டியம் மாலிக்கா எனும் நடனப் பள்ளியின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவின் ஓர் அங்கமாக இந்நிகழ்ச்சி படைக்கப்பட்டது. இந்த விழாவில் கலைத்துறைக்குப் பெரிதும் பங்களித்த ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மண்ணுலகில் வாழும் ஆத்மாக்களோடு விண்ணுலகில் உறையும் ஆத்மாக்களுக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஒருவரின் வாழ்க்கையில் போற்றப்படும் உயர்ந்தோருக்கும் சமர்ப்பணமாக அமைந்தது ஆத்ம அர்ப்பணம் நாட்டிய நிகழ்ச்சி.
பரதக் கலை காலத்துக்கேற்ப புது மெருகூட்டப்பட்டாலும் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இதன் சிறப்பை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்க நடன ஆசிரியர் மாலிக்காவும் அவரின் மாணவர்களும் முனைந்துள்ளனர்.
ஐந்து வயதில் பரதக்கலையைப் பயிலத் தொடங்கி பின்னர் கேரளாவின் மோகினியாட்டத்தையும் பயின்றவர் மாலிக்கா. இவர், மோகினியாட்டத்தை மையமாகக் கொண்டு 'மோகினியின் அற்புதமான காவியங்கள்- மாயக்காரியின் பயணம், மோகினி மாயவா' எனும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 18 முதல் 20ஆம் தேதி வரை மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் படைத்தார்.
முனைவர் ரச்சிதா ரவி, முனைவர் இந்திரா ராணி லவன் ஈஸ்வரன் இருவரும் நாட்டிய அமைப்பில் உதவியதாகக் கூறப்பட்டது.
பரத நாட்டியம், மோகினியாட்டம் இரண்டையும் கலந்த புத்தாக்கமிக்க இப்படைப்பில் நாட்டுப்புறக் கதைகள் துடிப்புமிக்க ராகங்களில் நடனம் மூலம் வருணிக்கப்பட்டன.
செய்தி: பொன்மணி உதயகுமார்

