சிங்கப்பூர் இசை ரசிகர்களின் ரசனை தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக மக்களிடம் வரவேற்பு பெறாத பாடல்களைக்கூட கவனித்து அவற்றில் உள்ள நுணுக்கங்களை ரசித்து சமூக வலைத்தளங்களின் வழி தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர் என்று கூறினார் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான டி. இமான்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் நேரடி இசைக் கச்சேரி நடத்தவிருக்கும் இவர், "சிங்கப்பூர் மக்களின் அன்பு அபரிமிதமானது. பணிநிமித்தமாகவும் சுற்றுலாவுக்காகவும் எப்போது வந்தாலும் சிங்கப்பூர் எனக்கு பல மகிழ்ச்சியான நினைவுகளைத் தந்துள்ளது. அதிலும் நேரடியாக மக்களின்முன் நடக்கவிருக்கும் இசைக் கச்சேரி மிகுந்த உற்சாகத்தையும் கூடுதல் மகிழ்ச்சியையும் அளிக்கிறது," என்று கூறினார். இந்த இசைக் கச்சேரியில் மக்களுக்கு வியப்பூட்டும் வகையில் திரைப்படப் பாடல்களின் தொகுப்புடன் சேர்த்து ஒரு திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரையுள்ள பின்னணி இசை உருவாகும் விதத்தையும் இசைக் குழுவின் அணுமுறையையும் விளக்கும் சிறப்பு அங்கமும் இடம்பெறவுள்ளது என்று ஸூம் தளம் வழி செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
நான்காவது வயதிலேயே முறையாக மேற்கத்திய, இந்திய பாரம்பரிய இசையும் பியானோ, டிரம்ஸ் இசைக் கருவிகளையும் கற்கத் தொடங்கிய இமான், சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். தன்னுடைய இசை ஆர்வத்திற்குப் பெற்றோர் பக்க பலமாய் நின்றனர் என்று கூறிய இவர் ஒருமுறை தனக்கு கீபோர்ட் இசைக்கருவி வாங்குவதற்காக பெற்றோர் தன் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்த நிகழ்வினைக் கூறி நெகிழ்ந்தார்.
தன்னுடைய 15வது வயதில் இசைத்துறையில் காலடி எடுத்துவைத்தார் இமான். ஆரம்பத்தில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்தார்.
தற்போது தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன்னுடைய 20 ஆண்டுகால இசைப் பயணத்தில் 150க்கும் மேற்பட்ட புதிய பாடகர்களை இமான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் உட்பட திறமையுள்ள பாடகர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றிருக்கும் இமானின் நேரடி இசைக் கச்சேரி இம்மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் எஸ்பிளனேட் இசையரங்கில் நடைபெறவுள்ளது.
பிரபல பின்னணிப் பாடகர்களான வைக்கம் விஜயலக்ஷ்மி, ரஞ்சித், ஜித்தின்ராஜ், வந்தனா ஸ்ரீனிவாசன், வி. எம். மஹாலிங்கம், ஸ்ரீநிஷா, திருமூர்த்தி ஆகியோர் கச்சேரியில் பாடவுள்ளனர்.
மூன்று மணிநேரம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு '8 பாயிண்ட் என்டர்டெய்ன்மெண்ட்' பொழுதுபோக்கு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. www.ticketmaster.sg இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மோனலிசா

