சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளாரும் நாடக ஆசிரியருமான மறைந்த திரு சே. வெ. சண்முகத்தின் சிறுகதை, வானொலி நாடகப் பிரதிகளை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறது தேசிய நூலக வாரியம். 'மீன் வாங்கலையோ' என்ற திரு சே. வெ. சண்முகத்தின் நகைச்சுவை சிறுகதைத் தொகுப்பு முதலிய படைப்புகளின் கையெழுத்து, அச்சுப் பிரதிகளைத் தேசிய நூலக வாரியத்துக்கு கொடையளித்துள்ளார் அவரின் கடைசி மகளான திருவாட்டி வள்ளியம்மை சண்முகம்.
தனது தாயாரிடமிருந்து தந்தையின் படைப்புகளைப் பெற்றுக்கொண்டதாகவும், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் திருவாட்டி வள்ளியம்மை தெரிவித்தார். சிங்கப்பூர் சுதந்திரமடைந்ததற்கு முன்பிருந்த காலகட்டத்தைச் சித்திரிக்கும் இதுபோன்ற படைப்புகளை சொகுசான சூழலில் வளரும் இளைய தலைமுறையினர் படித்து சிங்கப்பூரின் வளர்ச்சியை அறிவது அவசியமென கருதுவதாகவும் அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
"அப்பா இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். தனது படைப்புகள் மிக பத்திரமாக இருக்கவேண்டும் என்று அவர் எப்பொழுதும் ஆசைப்பட்டார். அதை நிறைவேற்றியதில் எனக்கு மிகுந்த மனநிறைவு," என்று நெகிழ்ந்தார் 51 வயது திருவாட்டி வள்ளியம்மை.
சிங்கப்பூர் தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தேசிய நூலக வாரியத்தின் நூலக அதிகாரிகள், முன்னோடிப் படைப்பாளர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டதில், திருவாட்டி வள்ளியம்மை பல சஞ்சிகைகள், திரு சே. வெ. சண்முகத்தின் வெளியிடப்படாத படைப்புகள் முதலியவற்றைக் கொடையளித்ததாக கூறினார் நூலக அதிகாரி திருவாட்டி சுந்தரி பாலசுப்ரமணியம்.
இப்பிரதிகளுடன், கடந்த ஓராண்டு காலத்தில் 68 நன்கொடையாளர்களிடமிருந்து 3,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மரபுடைமை பொருள்களைத் தேசிய நூலக வாரியம் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் மரபுடைமையைத் தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கிலான தேசிய நூலக வாரியத்தின் திட்டங்கள் கடந்த புதன்கிழமையன்று நடந்தேறிய நன்கொடையாளர் பாராட்டு விழாவில் அறிவிக்கப்பட்டன.
தேசிய நூலகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாக்க பொதுமக்களும் நன்கொடையாளர்களும் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து செயல்படுவதைப் பாராட்டினார்.
வருங்காலத் தலைமுறையினரை 'சிங்கப்பூர் கதைசொல்லிகளாக' வளர்த்தெடுப்பதற்கு இப்பணி கைகொடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தேசிய ஆவண காப்பகத்தின் 'சிட்டிசன் ஆர்க்கைவிஸ்ட்' திட்டத்தின் விரிவாக்கமான 'டோக்யுமெண்டிங் சிங்கப்பூர் டுகெதர்' எனப்படும் இணையத்தளம் அடுத்த ஆண்டு தொடக்கம் காணவிருப்பதாகவும் அமைச்சர் நிகழ்வில் அறிவித்தார்.
தேசிய நூலக வாரியத்தின், சிங்கப்பூர் தேசிய ஆவண காப்பகத்தின் தொகுப்புகளை 'ஆர்க்கைவ்ஸ் ஆன்லைன்', 'புக்எஸ்ஜி', 'பிக்சர்எஸ்ஜி' ஆகிய தளங்களில் மக்கள் காணலாம்.
ஆ. விஷ்ணு வர்தினி

