டுரியான் பழ விற்பனையில் அசத்திவரும் சிங்கப்பூர் இந்தியர்

டுரியான் பழ விற்பனையில் அசத்திவரும் சிங்கப்பூர் இந்தியர்

2 mins read
b1a4b436-79b1-4c08-8d22-142c67a5f2c0
தோலையும் கொட்டைகளையும் விற்காமல் மீந்தவற்றையும் பூமிக்கு உரமாக அளிப்­பது '99 ஓல்ட் டிரீஸ்' நிறுவனத்தின் நோக்­கம் என்கிறார் அவினாஷ். படம்: பொன்மணி உதயகுமார் -

பொன்­மணி உத­ய­கு­மார்

டுரி­யான் பழத்தை சிங்­கப்­பூ­ரில் பல இனத்­த­வ­ரும் விரும்பி உண்­டா­லும், இதனை அதி­கம் விரும்பி உண்­ப­வர்­கள் சீனர்­கள். அந்த வகை­யில் இதன் வர்த்­த­கத்­தில் அதி­கம் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களும் அவர்­கள்­தான். வழக்­கத்­திற்கு மாறாக டுரி­யான் வர்த்­த­கத்­தில் கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு கால் பதித்­தார் அவி­னாஷ் மகேந்­தி­ரம்.

சிறு­வ­ய­தி­லி­ருந்து இவர் ஒரு டுரி­யான் பிரி­யர். தேசிய சேவை­யின்­போது சந்­தித்த நண்­பர் கெல்­வின் டான் டுரி­யான் வியா­பா­ரத்தை நிர்­வ­கிக்க அழைத்­த­போது, சற்­றும் தயங்­கா­மல் ஒப்­புக்­கொண்­டார் அவி­னாஷ். இந்­தத் தொழி­லில் சீனர்­களின் ஆதிக்­கமோ மொழி­யி­னால் வரக்­கூ­டிய தடங்­கல்­களோ இவ­ருக்­குப் பெரிய சவா­லா­கத் தோன்­ற­வில்லை.

'99 ஓல்ட் ட்ரீஸ்' என்பது இவர்களது நிறுவனத்தின் பெயர். மலேசியத் தோட்டத்தில் 99 டுரியான் மரங்கள் இருப்பதால் இந்தப் பெயர் சூட்டியதாகக் கூறினார் அவினாஷ்.

அதிகாலை ஐந்து மணிக்கு மலேசியத் தோட்டத்தில் பறிக்கும் பழங்களைத் தரம் சோதித்த பிறகு இங்கு லாரியில் கொண்டுவந்து இரவிற்குள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது இந்நிறுவனம்,

தற்­போது ஊட்­ரம் ரயில் நிலை­யத்­திற்கு அருகே 'ஸ்திங்க்­கீஸ்' எனும் உண­வுப் பண்­டம் விற்­கும் கடை­யை­யும் திறந்­துள்­ள­னர். இதில் டுரி­யான் பழம்கொண்டு தயாரிக்கப்பட்ட பல­கா­ரங்­களும் குளிர்­பா­னங்­களும் விற்­கப்­ப­டு­கின்­றன.

பழத்தை உண்ணாதவர்களும் இவற்றை விரும்­புகிறார்­கள் என்­றும் சுற்­றுப்­ப­ய­ணி­களும் இவற்றை சுவை­பார்க்க இங்கு வரு­வ­தா­க­வும் மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார் அவி­னாஷ்.

தரத்­துக்கு முக்­கி­யத்­து­வம் தரும் இவ­ரது நிறு­வ­னம் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நம்­பிக்­கை­யைக் காப்­பாற்ற, தர­மான பழங்­கள் கிடைக்­காத நேரங்­களில் விநி­யோ­கத்தை நிறுத்­தி­ய­தும் உண்டு.

விற்காமல் மீந்துபோகும் பழங்­களை வீணாக்­கா­மல் பல­கா­ரங்­கள் தயா­ரிப்­ப­தில் நிறு­வ­னம் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார் அவி­னாஷ். மேலும், பழத்­தின் தோல், கொட்­டை­கள் போன்­ற­வற்றை அரைத்து உர­மாக மாற்­று­வது குறித்து தேசிய பூங்­காக் கழ­கத்­து­டன் பேச்சு நடத்­து­வ­தா­கக் கூறி­னார். மலே­சி­யா­வி­லி­ருந்து பழங்­களைக் கொண்­டு­வ­ரும் வாக­னங்­களில் உரத்தைத் திருப்பி அனுப்பி­வைக்­கவும் இவர் திட்­ட­மி­டு­கி­றார்.