அனுஷா செல்வமணி
தமிழர்களின் கலாசாரக் கூறுகளான பூத் தொடுத்தல், தோரணம் கட்டுதல், கோலம் இடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு வெஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களுக்கு அடுத்த மாதம் கிடைக்க இருக்கிறது.
சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் சிறப்பு அம்சமாக மறைந்துபோன கலையான பாம்பாட்டி வித்தை இடம்பெறும். நம் வரலாற்றை நினைவூட்டும் வகையில் கச்சாங் பூத்தே தின்பண்டத்தைச் சுவைக்கவும் ஓர் அரிய வாய்ப்பு.
'தீபாவளி ஃபியெஸ்டா' எனும் வெஸ்ட் கோஸ்ட் தீபாவளி கொண்டாட்டம், அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 வரை, புளோக் 728, கிளமெண்டி வெஸ்ட் சாலை இரண்டின் புரொமனாடில் நடைபெறும்.
போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தின் நூறு வசதி குறைந்த குடும்பங்களுக்கு, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தோடு இணைந்து நிகழ்ச்சிக்கான இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஆடல், பாடலுடன் வசந்தம் கலைஞர்களான சுதாஷினி, விஷ்ணு பாலாஜி, சிந்து, குணசெல்வம் கிருஷ்ணன், செல்வதுரை ஆகியோரின் படைப்புகளுடன் ஓம்கார் நடனமணிகள், மணிமாறன் கிரியேஷன்ஸ் நடனக்கலைஞர்கள், 'யார் பான்ச் ஆப் பாங்ரா' குழுவினர் ஆகியோரின் நடனங்களையும் கண்டு ரசிக்கலாம்.
பல இன மக்களையும் ஒன்றிணைக்கும் முனைப்பில், பாடகர்கள் சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் பாடுவார்கள். கலை நிகழ்ச்சிக்கு ஒலி 96.8ன் படைப்பாளர் சாந்தி குருசாமி நெறியாளராக இருப்பார். கூடுதல் விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கும், வெஸ்ட் கோஸ்ட் சமூக நிலையத்தை 67791098 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
sanush@sph.com.sg

