மாதங்கி இளங்கோவன்
'லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸ்' என்னும் தொண்டூழியத் திட்டத்தின்கீழ், பத்தாவது ஆண்டாக நேற்று 100 தொண்டூழியர்கள் தீபாவளி அன்பளிப்புப் பைகளை வசதி குறைந்த 500 குடும்பங்களுக்கு விநியோகம் செய்தனர். அப்பைகளை நேற்று முன்தினமே தொண்டூழியர்கள் ராமகிருஷ்ண மிஷன் கட்டடத்தில் தயார் செய்யத் தொடங்கினர்.
ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் முறுக்குகள், பலகாரங்கள், தீபாவளி மெழுகுவத்திகள் என, தீபாவளி கொண்டாட்ட உணர்வை வரவழைக்கும் பொருள்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 வெள்ளி ரொக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
'லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸ்' ஏற்பாட்டுக் குழுவிலுள்ள அ.விக்னேஸ்வரி, 28, "எங்களுடைய தொண்டூழியர்களின் உதவியில்லாமலும் நன்கொடையளித்த பொதுமக்களின் ஆதரவு இல்லாமலும் எங்களால் பத்தாண்டுகளாக நிறைய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியிருக்க முடியாது," என்றார்.
இவ்வாண்டின் முயற்சிக்கு வீட்டிலிருந்து 60 பேர் பலகாரம் செய்து 'லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸுக்கு' கொடுத்தனர்.
இந்தத் தொண்டூழிய முயற்சிக்கு புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் முறுக்குகளையும் ஸ்ரீ ராமர் ஆலயம் 'மிக்சர்' முறுக்குகளையும் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் மெழுகுவத்திகளையும் நன்கொடையாக அளித்தன.
கடந்த பத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் இந்தத் தொண்டூழிய முயற்சிக்கு மொத்தம் 1.2 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
'லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸ்' திட்டமானது, வருமானம் குறைந்த குடும்பங்களும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் குதூகலமாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கொவிட்-19 தொற்றுப்பரவல் காலத்திலும் தொண்டூழியர்கள் தொடர்ந்து தீபாவளி அன்பளிப்புப் பைகளை தயார்செய்து, அவற்றைக் குடும்ப சேவை நிலையங்களின் துணையுடன் விநியோகம் செய்தனர்.
ஓரறை, ஈரறை வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசிக்கும் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை மீண்டும் நேரடியாக வழங்க தொண்டூழியர்கள் உற்சாகமாக இருந்தனர்.
ஆறு ஆண்டுகளாக தொண்டூழியராக இருக்கும் ஆதிரா உன்னிதன், 26, ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செய்து வருகிறார்.
" ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை கொடுப்பது மனநிறைவு அளிக்கிறது. அன்பளிப்புப் பை களைப் பெற்றுக்கொள்ளும்போது அவர்களது முகங்களில் பூக்கும் மகிழ்ச்சி என்னையும் மகிழ்ச்சிப்படுத்துகிறது," என்றார் அவர்.
தீபாவளி அன்பளிப்புகளுடன் 500 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரியாணிப் பொட்டலங்களையும் 'லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸ்' தொண்டூழியர்கள் வழங்கவுள்ளனர்.
பொதுமக்கள் இம்முயற்சிக்கு முழுக்கவும் சமூக ஊடகங்களின் வாயிலாக தங்களது நன்கொடைகளை வழங்கினர்.
தங்களது தாய்நாட்டில் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட முடியாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு, 'லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸ்' இந்தச் சிறிய முயற்சியின் மூலம் தீபாவளியை மகிழ்ச்சி நிறைந்த திருநாளாக அமைத்துத்தர விரும்புகின்றது.

