சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கம், சிங்கப்பூரில் வாழும் கூத்தாநல்லூர் சங்க குடும்ப உறுப்பினர்களுக்கு குதூகலமான வெள்ளி விழாவுக்கு ஏற்பாடு செய்தது.
கொவிட்-19 காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு வெள்ளிவிழா நேரடியாக இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொளம் ஆயர் சமூக மன்றம் மற்றும் சாங்கி கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
குடும்ப தினம், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரத்தை பல இன தொண்டர்களுடன் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இளையர்கள், குழந்தைகளுக் கான மணல் கலை சிற்பங்களின் செயல் விளக்கமும், திருவிழா விளையாட்டுகள் மற்றும் 'மேஜிக் ஷோ' நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அங்கமாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் சிறப்புப் பயிற்சி நடை பெற்றது. சிங்கப்பூர் குடிமைத் தற் காப்பு படையின் அதிகாரியான உத்மான் மற்றும் அவரது குழு வினர் அனைவருக்கும் இதய இயக்க மீட்பு (CPR) உள்ளிட்ட முதலுதவி செயல்கள் பற்றி விளக்கம் அளித்த னர்.
சமையலறையில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், எப்படி அணைப் பது, அவற்றுக்கான சிறந்த வழிகள், தீ அணைப்பான்களை வீட்டில் இருப்பதன் முக்கியத்துவம், 995 அவசர தொலைபேசி எண் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அன்றைய தினம் சுவையான கூத்தாநல்லூர் பிரியாணி, கூத்தா நல்லூர் பிரபல 'டம்ரூட் கேக்' (Damroot) எனும் சூடான காபி மற்றும் இஞ்சி தேநீர், குளிர்ந்த 'பாண்டுங்' பானங்கள் பரிமாறப்பட்டன. வெள்ளி விழாவில் எட்டு வயது முதல் 80 வயது மூத்த குடிமக்கள் வரை 250 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கத்தின் தலைவர் சடையன் அப்துல் அலீம், துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தலைவருமான ஆடம் சாஹுல் ஹமீது உட்பட சங்கத்தின் இளம் தலைவர்களும் நிர்வாக மன்ற உறுப்பினர்களும் குடும்பத்தை மையமாகக் கொண்டு வெள்ளிவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.
1996ஆம் தொடங்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கம் மக்களுக்கு பயன்தரத்தக்க பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

