எஸ். விக்னேஸ்வரி
தீபாவளி என்பது சிங்கப்பூரில் ஒரு சிறுபான்மையினர் கொண்டாடும் விழா. எனினும், பல இனம், மதம், கலாசாரம் உள்ள சிங்கப்பூரில் மற்ற இனத்தவரும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் குதூகலம் சேர்க்கின்றனர்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தைவிட்டு வெளியே வந்து தீவின் மற்ற இடங்களைப் பார்த்தால், அங்கும் தீபாவளி விழாக்கால உணர்வு களைகட்டியுள்ளது.
கடைத்தொகுதிகள், குடியிருப்பு வட்டாரங்கள், அடுக்குமாடி புளோக்குகள் ஆகியவற்றில் தீபாவளி அலங்காரங்கள் அசத்துகின்றன.
அந்த வரிசையில் சுவா சூ காங் அவென்யூ 5ல் அமைந்துள்ளது 'இன்ஸ்' (iNz) தனியார் கூட்டுரிமை வீடுகளிலும் தீபாவளி அலங்காரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வரவேற்புப் பகுதியில் வண்ணமிகு அலங்காரங்கள் வரவேற்றன. தீபாவளி வாழ்த்துகளும் வண்ண தாட்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகளும் சேர்ந்த அலங்காரங்கள் களைகட்டியிருந்தன.
வளாகத்தில் உள்ள பொது இடங்களிலும் வண்ணவண்ண விளக்குகளும் அலங்காரங்களும் போடப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட ஓர் அலங்காரம் கண்ணைப் பறித்தது.
பெரிய மயில் வடிவம். அதைச் சுற்றி மிளிரும் விளக்குகள். பார்ப் பதற்கே பளிச்சென்று இருந்தது. மயில் இறகுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மயில் வடிவத்துக்குக்கீழ் இருந்த ஒலிப்பெருக்கியிலிருந்து பாரம்பரிய இந்திய இசை ஒலித்துகொண்டிருந்தது. இது தீபாவளி உணர்வை இன்னும் இரண்டு மடங்கு கூட்டியது.
இதை வடிவமைத்தவர்கள் குடியிருப்பாளர்களோ கட்டட நிர்வாகக் குழுவோ அல்ல. இங்கு வேலைபார்க்கும் துப்புரவுப் பணியாளர்கள்தான் மயில் வடிவ தீபாவளி அலங்காரத்தை செய்திருந்தனர்.
மலாய்க்காரர்கள் அடங்கிய குழுவினர் கைவண்ணத்தில் வண்ணமிகு மயிலாக ஜொலித்தது.
"நாங்கள் அனைத்து விழாக் களுக்கும் வளாகத்தை அலங்கரிப்போம். சென்றாண்டு தீபாவளிக்கு சிறிய அளவில் அலங்காரங்கள் செய்தோம். இந்த ஆண்டு வித்தியாசமாக செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.
"மயில் என்பது இந்திய கலாசாரத்தில் அழகு, அன்பு, தன்னம்பிக்கை, வலிமை போன்றவற்றை பிரதிபலிக்கிறது. இதனால் மயிலை கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தோம்," என்று விளக்கினார் துப்புரவு மேற்பார்வையாளர் ஹாஃபிடா.
அலங்காரம் செய்த குழுவிற்கு தலைமையேற்றிருந்த இவர், தீபாவளி அலங்காரங்கள் பற்றி ஆராய்ச்சியே செய்திருந்தார்.
13 பேர் அடங்கிய குழு கடந்த இரண்டு மாதங்களாக இதற்காக கடுமையாக உழைத்தது. இவர்களது படைப்பு குடியிருப்பாளர்களை மலைக்க வைத்துள்ளது.
"இங்கு குறைவான இந்தியர்கள் வசிக்கின்றனர். இருப்பினும், தீபாவளியைக் கொண்டாடுபவர் களைக் கருதி அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார் குடியிருப்பாளர் உமா கோபால்.
அலங்காரம் அழகாகவும் இருக்கவேண்டும். அதே சமயம், அலங்காரத்துக்கான பொருட் களுக்கு சிக்கனமாக செலவிட வேண்டும். இதனால் மறுபயனீடு செய்யும் யோசனை குழுவிற்கு தோன்றியது.
"அட்டை, தாள், பழைய பொருட் களைச் சேகரித்து அவற்றுக்கு வண்ணம் பூசினோம். சிலவற்றின் மேல் வண்ணத் தாட்களை ஒட்டினோம். எங்கள் கற்பனைக்கு வந்ததை எங்கள் கைவண்ணத்தில் படைத்தோம்," என்று ஹாஃபிடா குறிப்பிட்டார்.
தீபாவளிக்காக அலங்காரம் செய்ய விரும்பிய துப்புரவுக் குழு முதலில் நிர்வாகக் குழுவை அணுகியது.
"தீபாவளி அலங்கார கருப் பொருள் பற்றி எங்களிடம் தெரிவித்தபோது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை," என்றார் குழுவிற்கு ஆதரவு அளித்த வளாகத்தின் மேலாளர் ரோசேலியா போ.
குடியிருப்பாளர்கள் வாழும் இடத்தை அழகாக வைத்திருக்கவும் விழாக்கால உணர்வை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் துப்புரவாளர் குழு, தங்கள் கடமையையும் தாண்டி பணியாற்றியிருக்கிறது.