மோனலிசா
சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கை நினைவுகூரும் விதமாக ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூர் ஆற்றைக் கருப்பொருளாகக் கொண்டு நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு ஏஸ்தெலெட்டிக் ஆர்ட் கேலரி எனும் கலைக்கூடம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் ஓவியர் எம் ஜி குமார், அவரது மகளும் ஓவியருமான கீஷா எலிசபெத் இருவரின் 19 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் வரலாற்று நினைவுகளைத் தூண்டும் கிளார்க் கீ, கேவெனா பாலம் ஆகிய நதிக்கரையோரப் பகுதிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
"நம்முடைய பாரம்பரியத்தை நினைவுகூறும் சான்றாக சிங்கப்பூர் ஆற்றை 1960களில் இருந்தவாறு சித்திரிக்க விரும்பினேன்.
"பல்வேறு இனங்களைச் சார்ந்த முன்னோடி மக்கள் ஒன்றிணைந்து வாழ்க்கையைத் தொடங்கியதன் அடையாளமாக இருக்கும் இந்த நதியின் சிறப்பை எடுத்துச்சொல்லும் வாய்ப்பாக இதைக் கருதுகிறேன்," என்று கூறினார் 66 வயது ஓவியர் குமார்.
புதிய முயற்சியாக இக்கண்காட்சியில் ஒவ்வோர் ஓவியத்திற்கும் உள்ளூர், வெளிநாட்டுக் கவிஞர்கள் கவிதை எழுதியுள்ளனர்.
மொத்தம் 14 கவிஞர்கள் தங்களது தாய்மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் எழுதிய கவிதைகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியம் ஒன்றுக்குத் தமிழில் கவிதை எழுதியுள்ளார் திருமதி பாரதி மூர்த்தியப்பன்.
"சங்கமம் என்ற ஓவியம் நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கும் எதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பதாக என் உள்மனம் கூறவே இந்த ஓவியத்தை ஒட்டி கவிதை வடித்தேன்," என்று கூறினார்.
தனியார் நிறுவன இயக்குநரான இவர், இரு வேறு கலைகளை இணைத்த இந்த முயற்சி மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் 30ஆம் தேதி முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெறும் இக்கண்காட்சி, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறுகிறது.
கண்காட்சியின் தொடக்க விழாவில் தொடர்பு, தகவல் அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திருமதி ஜோஸஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இம்மாதம் 13ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஓவியங்களுக்குக் கவிதை வடித்த கவிஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இம்மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கலைகள் மூலம் சிங்கப்பூரின் வரலாற்றை நினைவுகூருவதன் அவசியத்தைப் பகிரும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் கவிதைத் திருவிழாவோடு, சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு எழுத்தாளர்களும் இந்தக் கண்காட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
மேல்விவரம் பெற விரும்புவோர் ArtPoetryExhibition.peatix.com எனும் இணையத்தளத்தை நாடலாம்.
இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

