வியட்னாமியக் கடலோரம் கடந்த திங்கட்கிழமை மூழ்கும் நிலையில் தத்தளித்த படகு ஒன்றிலிருந்து 303 இலங்கைவாசிகள் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிக்குப் பின்னர் கேப்டன் அனில் சௌத்ரி, 51, ஜப்பானிய கொடி தாங்கிய தமது 'ஹெலியோஸ் லீடர்' கப்பலை நேற்று முன்தினம் சிங்கப்பூரில் நிலைநிறுத்தினார்.
'லேடி 3' என்னும் மியன்மார் படகு நடுக்கடலில் தத்தளிப்பதாக சிங்கப்பூர் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து திங்கட்கிழமை பிற்பகல் 2.50 மணிவாக்கில் 'ஹெலியோஸ் லீடர்' கப்பல் தகவல் பெற்றது.
60,212 டன் எடைதாங்கும் அந்தக் கப்பல், அப்போது ஜப்பானிலிருந்து ஜப்பானிய, தென்கொரிய கார்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது. தகவல் பெற்ற உடன் தென்மேற்கே ஒன்றரை மணிநேரம் அந்தக் கப்பல் விரைந்து சென்று 'லேடி 3' படகைத் தேடியது. வியட்னாமின் தென்கடலோரம் 210 கடல்மைல் தூரத்தில் இருந்த அப்படகை கப்பல் அடைந்தது.
மிகவும் சவாலான வானிலைக்கு இடையே தமது 26 ஊழியர்களுடன் நடுக்கடலில் மீட்புப் பணியை நிறைவேற்றியது குறித்து, இந்திய நாட்ட
வரான கேப்டன் அனில் சௌத்ரி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
"தத்தளித்தோரை மீட்க மூன்று மணி நேரத்திற்கும் மேலானது. கடலலைகள் சீற்றமடைந்து மிரட்டின. படகினுள் ஏற்கெனவே நீர் புகுந்துவிட்டதால் எந்நேரத்திலும் மூழ்கக்கூடிய அபாயத்தில் அது இருந்தது. அதில் இருந்த நூற்றுக்கணக்கானோர் தங்களைக் காப்பாற்றும்படி கதறினர். கப்பலைச் சுற்றியும் படகைச் சுற்றியும் 3 மீட்டர் ஆழத்திலிருந்து கடல் பொங்கியதால் இரண்டுமே ஆட்டம் கண்டன," என்று விவரித்தார் கேப்டன் சௌத்ரி.
இருப்பினும் கப்பல் ஊழியர்கள் பெருமுயற்சி எடுத்து படகின் அருகில் கப்பலைக் கொண்டு சென்றனர். கப்பலின் ஏணிப்பகுதியை படகின் மட்டத்திற்குக் கீழிறக்குமாறு கேப்டன் சௌத்ரி உத்தரவிட்டார். அந்த ஏணியைப் பயன்
படுத்தி அவர்கள் படகின் மேல்தளத்திற்கு பத்திரமாக ஏறி வந்தனர்.
படகில் இருந்தோர் கப்பலுக்கு மாற ஏணியை அவர்களால் பிடிக்க இயலவில்லை. கடலலைகளின் சீற்றத்தால் கப்பலும் படகும் முன்னும் பின்னும் சென்றதாக ஹெலியோல் லீடர் கப்பலின் தலைமைப் பொறியாளர் தினேஷ் கன்னா, 39, கூறினார்.
இந்த நிலையில் ஏணியைக் கைவிட்டு, ஒவ்வொருவரின் கையையும் பிடித்து தூக்கிக் காப்பாற்ற ஊழியர்கள் முடிவெடுத்து அதன்படி செய்தனர்.
"அது சவாலான பணி. கடலலை
களால் கப்பலும் படகும் தள்ளப்பட்டபோது இரண்டும் ஒன்றுசேரும் ஒவ்வொரு விநாடியையும் பயன்படுத்தி ஒவ்வொருவரையும் கைபிடித்து கப்பலுக்குள் தூக்கிக் காப்பாற்றினோம்," என்றார் திரு கன்னா. இவரும் இந்திய நாட்டவரே.
"ஆனால், அப்போது படகில் இருந்தோர் பீதியில் அவசரப்பட்டனர். மேலே வர எல்லாரும் மொத்தமாக முண்டியடித்தபோது அவ்வாறு செய்யவேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினோம். காரணம் கப்பலிலும் இல்லாமல் படகிலும் இல்லாமல் கடலுக்குள் அவர்கள் விழும் வாய்ப்பு அதிகம்," என திரு கன்னா விவரித்தார்.
மீட்கப்பட்ட 303 பேரில் 19 பேர் பெண்கள், 20 குழந்தைகள். அவர்கள் அனை வரும் கப்பலின் சரக்குப் பகுதிக்குப் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தனை அதிகம் பேருக்கு அந்தப் பகுதியில்தான் அடைக்கலம் தரமுடியும் என்பதால் அங்கு அவர்களை ருஸ்யாய்டி இர்ஃபான், 19, என்னும் சிங்கப்பூரர் அழைத்துச் சென்றார். ஹெலியோஸ் லீடர் கப்பலை நிர்வகிக்கும் என்ஒய்கே ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர் இவர்.
303 பேரையும் முழுமையாக மீட்க இரவு 7.30 மணி ஆனது. காப்பாற்றப் பட்டவர்கள் கப்பல் கேப்டனுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். ஒருசிலர் ஊழியர்களின் காலில் விழுந்து உணர்ச்சிபொங்க நன்றி கூறினர்.
மீட்கப்பட்டோரின் பசியைத் தீர்க்க ரொட்டியும் 'சூப்'பும் தயார் செய்யப்பட்டிருந்தன.
நடுக்கடலில் 303 இலங்கையரை மீட்டது சிரமமான பணி: கேப்டன் சௌத்ரி