கதைகளின் முடிச்சுகளை சுவாரசியமாக அவிழ்ப்பது எப்படி, மர்மமும் புதிரும் கலந்த கதைகளை எழுதுவது எப்படி போன்ற உத்தி
களையும் நுட்பங்களையும் நேற்று இங்கு நடைபெற்ற பயிலரங்குவழி விளக்கினார் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை ஒட்டி ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றப்புனைவு பயிலரங்கை சுவாரசியமான முறையில் அவர் வழிநடத்தினார்.
'ஜன்னல் கைதிகள்', 'நீ?' போன்ற பல துப்பறியும் நாவல்களை எழுதிய இவர், திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்
களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
வாழ்க்கையில் நடக்கும் உண்மைச் சம்பவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை ஆராய்ந்து, அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை வருணித்து, காட்சிகளை உருவாக்கி, சிறுகதை எழுதுவது எப்படி என்பதையும் அவர் விளக்கினார்.
"ஒரு கதை என்பது, அலங்கரிக்கப்பட்ட பொய் அல்லது உண்மை. கதைகள் எழுத வயது வரம்பில்லை. குற்றப் பின்னணிக் கதைகளுக்குக் கற்பனை மிக அவசியம். ஒரு கதையை எழுதும்போது, அதன் முடிவைச் தெளிவாக உறுதிசெய்து, அந்த முடிவை அடையும் நோக்கில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும்," என்றார் திரு பிரபாகர்.
"குற்றப் பின்னணிக் கதைகளை எழுதும்போது, குறைவான கதாபாத்திரங்களுடன், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்து, கதையை நகர்த்தினால் புரியும்படியாக இருக்கும்.
"எழுத்தாளர்கள், வாசகர்களுடன் ஓர் உறவை வளர்த்துக்கொள்வதுதான் ஓர் எழுத்தாளரின் அடிப்படை குணம். அவர்களுக்கு எளிமையான நடையில் கதையைப் புரிய வைப்பது, எழுத்தாளரின் திறமை என்றார் அவர். குற்றவியல் கதைகளில் அடிப்படையாக, 'யார் பேசுகிறார்', 'என்ன நடக்கிறது', 'எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வெளிப் படுகின்றன' ஆகிய வினாக்
களுக்கு விடைகாண வேண்டும்.
"வசனமோ, வாக்கியமோ சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். குற்றவியல் கதைகளில் அடைமொழிச் சொற்களைச் சேர்த்துக்கொண்டால் அது கதைக்கு மெருகூட்டும்.
"குற்றவியல் கதைகளில், குறிப்பாக கதையின் இறுதியை வியப்பு, கேள்வியோடு முடிக்கவேண்டும். அப்போதுதான் என்ன நடந்திருக்கும் என வாசகர்கள் தடயங்களைத் தேடத் தொடங்குவர்," என்று விளக்கினார் திரு பிரபாகர்.
பயிலரங்கில் கிட்டத்தட்ட 30 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர். கதையை மாறுபட்ட கோணத்திலிருந்து எழுத இனி முயற்சி செய்யப்போவதாகக் கூறினார் பயிலரங்கில் பங்கேற்ற பீட்டி உயர்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா.
தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அருள்குமரன், 48, "குற்றவியல் கதைகளுக்கெனப் புதிதாக யோசித்து, சுவாரசியமான கதைகளை உருவாக்கும் திறமை அனை வருக்கும் உண்டு. இன்று கற்றுக்கொண்ட உத்திகளைப் பயன்
படுத்தி எழுத்துப் பயணத்தை தொடரப்போகிறேன்," என்றார்.

