சிங்கப்பூரின் மற்ற ஸ்னூக்கர் வீரர்களைப் போல், 32 வயது ஷாரிக் சையதும் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து அமெரிக்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இருப்பினும், இம்மாதம் 6ஆம் தேதி அவர், அலோய்சியஸ் யாப், டோ லியன் ஹான் ஆகியோர் கொண்ட தமது குழுவிலிருந்து பிரிந்து நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டார்.
வெர்ஜினியாவிலிருந்து நியூயார்க்கை அடைய ஏழு மணிநேரம் காரில் பயணம் செய்து, பின்னர் அங்கிருந்து சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு ஆறு மணிநேரம் விமானத்தில் பயணம் செய்து, பின்னர் அங்கிருந்து 16 மணிநேரம் விமானப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.
இந்த நெடுந்தூர பயணம் அவருக்குக் களைப்பைக் கொடுக்கவில்லை. மாறாக, களிப்பைத்தான் கொடுத்தது. 30 வயது அரசாங்க அதிகாரி குமாரி விசாலாட்சி முனியாண்டியை அவர் கரம்பற்ற விருந்ததே அந்தக் களிப்புக்குக் காரணம்.
இம்மாதம் 8ஆம் தேதி சிங்கப்பூர் வந்துசேர்ந்தவுடன் ஷாரிக்கும் அவர் மனைவியும் நேராக திருமணப் பதிவகத்துக்குச் சென்று அங்குள்ள நடைமுறைகளை நிறைவேற்றிவிட்டு, பின்னர் இம்மாதம் 11ஆம் தேதி நடந்த தங்கள் திருமண ஆயத்த வேலைகளில் ஈடுபட்டனர்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் இரவு ஷாரிக், மறுபடியும் மொத்தம் 28 மணிநேரம் பயணம் செய்து புவேட்டோ ரிக்கோ பொது விருது ஸ்னூக்கர் போட்டியில் பங்கேற்கும் சிங்கப்பூர் குழுவினருடன் சேர்ந்துகொண்டார்.
"ஐந்து நாட்களில் முன்னும் பின்னுமாக உலகைச் சுற்றி வந்தது களைப்பாக இருந்தாலும் அதுவும் இரு சுகமான அனுபவமாக இருந்தது," என்று கூறிய உலகத் தர வரிசையில் 62வது இடத்தை வகிக்கும் ஷாரிக், உலகத் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயினின் ஃபிரான்சிஸ்கோ சஞ்சேஸ்-ருயிசை புவேட்டோ ரிக்கோ போட்டியில் தோற்கடித்தார். இருப்பினும் அடுத்த சுற்றில் 32வது இடத்தை வகிக்கும் போலந்தின் டேனியல் மசியோலிடம் ஷாரிக் தோற்றார்.
மீண்டும் சிங்கப்பூர் திரும்பும் ஷாரிக் தம் மனைவியுடன் தேன்நிலவுக்குச் செல்ல திட்டமிடுகிறார்.

