அனுஷா செல்வமணி
தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் கற்பிக்கும் தலைசிறந்த விரிவுரையாளர்களின் பணியையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் கடந்த மாதம் 28ஆம் தேதியன்று தொழில்நுட்பக் கல்விக் கழக விருது விழா 2022க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 30வது ஆண்டுவிழாவாகவும் இது அமைந்திருந்தது.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் 600 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைவர் திரு ஆண்ட்ரூ சோங், 'தொழில்நுட்பக் கல்விக் கழக ஆசிரியர் விருது', 'சிஇடி' பயிற்றுவிப்பாளர் விருது ஆகிய இரு பிரிவுகளில் விருது வழங்கினார்.
அவ்வாறு 'சிஇடி' பயிற்றுவிப்பாளர் விருதை 64 வயது திரு அலெக்சாண்டர் ஆனந்தராஜ் பெற்றார். 1998ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த இவர், தற்போது மூத்த மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்கு வளாகத்தில் கற்பித்து வருகிறார்.
தமது மாணவர் பருவத்தில் முன்னதாக வாழ்க்கைத்தொழில், தொழிலியல், பயிற்சிக் கழகமாக இருந்தது பின்னாளில் தொழில்நுட்ப கல்விக் கழகமாக உருவெடுத் ததைக் கண்டார். திரு அலெக்சாண்டர் விரிவுரையாளர் ஆவதற்கு முன்பு தற்காப்புத் துறையில் 16 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
தமது முன்னாள் வேலையில்\ கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் 24 ஆண்டுகள் கற்பித்துவரும் இவர், பள்ளியும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை வழிநடத்தியுள்ளார். தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியின் மின்னணுவியல், தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பள்ளி, இவருடைய தலைமையில் நிறுவப்பட்டதாகும்.
இவர் தொழிலியல் பங்காளித்துவத்தை வளர்த்துக்கொண்டு தொழில்நுட்ப நிலையங்களை அமைப்பதிலும் ஈடுபட்டார். தமக்குள்ள அனுபவங்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஒரு சிறந்த கல்விச் சூழலை திரு அலெக்சாண்டர் உருவாக்க முனைந்து வருகிறார்.
திரு அலெக்சாண்டர் போல திரு மாரிமுத்து முருகேசு, 48, 'சிஇடி பயிற்றுவிப்பாளர் விருதைப் பெற்றார். சிங்கப்பூர் ஆயுதப் படையில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியில் 2014ஆம் ஆண்டு விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் இருந்தபோது, வாகனப் பொறியியல் துறை சார்ந்த வேலையில் இவர் ஈடுபட்டிருந்தார். அதிலிருந்து கிடைத்த அனுபவத்தை மற்ற மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்று முன்னாள் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவரான இவர் எண்ணி, விரிவுரையாளராக விரும்பினார்.
தமது பொறியியல் துறை அனுபவம், மாணவர்களின் பயிற்சிக்கு நன்மை பயக்கும் என ஆழமாக நம்புகிறார் திரு மாரிமுத்து. பல துறைகளில் பணிபுரியும் மூத்த மாணவர்களுக்குக் கற்பிக்கும் இவர், தாம் கற்பிக்கும் திறன்களை அவர்கள் தங்களின் பணியில் பயன்படுத்துவது மனநிறைவு அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகள் விருந்தோம்பல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த எலியோரா கவிதா, 48, பணியிடைக்கால மாற்றத்தால் கல்வித் துறைக்குச் சென்றார். பயிற்சித்திட்டங்களை வழிநடத்திய அனுபவத்தைக்கொண்டு இவர் 2013ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் விரிவுரையாளராகவும் வழிகாட்டியாகவும் சேர்ந்தார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக ஆசிரியர் விருதை பெற்ற இவர், மாணவர்களிடம் அதிக அன்பு செலுத்துபவர். ஒவ்வொரு மாணவரின் தேவைகள், கற்றல் அணுகுமுறை, இலக்குகள் ஆகியவற்றை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு வழிகாட்டி வருகிறார் இவர்.
மாணவர்கள் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை அவர்கள் ஆராய்ந்து,அறிந்துகொள்வது இன்றியமையாதது என்று கூறும் எலியோரா, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டு ஆங்கில மொழித் துறையில் பட்டமும் பெற்றார்.

