குதிரைகளைக் கொண்டு சிறப்புத் தேவை
யுடைய சிறுவர்களுக்குக் கடந்த 10 ஆண்டு
களாக உதவி வருகிறார் சித்ரா ரோஜர்ஸ். 'ஹீலிங் ஹார்சஸ்' (Healing Horses) என்ற அரசு சாரா லாபமற்ற அமைப்பை நடத்தி வரும் இவர் ஒரு குதிரை சிகிச்சைமுறை நிபுணர். மதியிறுக்கம், உடற்குறை, பேச்சுப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றவர்களைப்போல இயல்பாக செயல்பட இந்த அமைப்பு உதவிவருகிறது.
வகுப்புகளின்போது குதிரைகளுடன் சிறுவர்கள் தங்களின் பொழுதை இன்பமாகக் கழிக்க முடிகிறது. அத்துடன் குதிரைகளுடன் நட்பை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டரை வயது முதல் 14 வயது வரையுள்ள 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இந்த அமைப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குதிரைமேல் உட்கார்ந்து சவாரி செய்வது, குதிரையைத் தடவிச் செல்லமாக விளையாடுவது, அவற்றுடன் விளையாடுவது போன்றவை சிறுவர்களுக்கு ஆறுதலுடன் மாறுபட்ட ஓர் அனுபவத்தைத் தருகின்றன. சிறப்பாக உருவாக்கப்பட்ட இயந்திரக் குதிரை மீது நான்கு சுவர்களுக்குள் சவாரி செய்யும் சிகிச்சையையும் சிறுவர்கள் பெறமுடிகிறது. இவ்வாறு உட்புறங்களில் குதிரைச் சவாரிவழி சிகிச்சை அளிக்கும் முதல் சிங்கப்பூர் அமைப்பாக 'ஹீலிங் ஹார்சஸ்' விளங்குகிறது.
இதுபோன்ற சிகிச்சைவழி சிறார்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்கிறார் சித்ரா.
"என் மகளுக்கு ஒன்றரை வயதிலேயே அரியவகை பெருமூளை வாதம் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஹீலிங் ஹார்சஸ் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அங்கு சேர்த்தோம். குதிரையைப் பார்த்த மகள், மிகவும் உற்சாகம் அடைந்தாள். அவள் நடப்பதில் பெரிய முன்னேற்றம் தெரிகிறது," எனப் பகிர்ந்துகொண்டார் பெற்றோர் ஒருவர்.

