குயின் சிறப்பு மாணவர் பராமரிப்பு நிலையம் 2012ஆம் ஆண்டு செயல்
படத் தொடங்கியது. இதன் தலைவராக இருக்கும் ரேச்சல் ரினா, பள்ளிப் படிப்புக்கு முன் அல்லது பின் தம் நிலையத்திற்கு வரும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு வேறுபட்ட கற்றல்முறையைப் பயன்படுத்துகிறார்.
இந்நிலையத்தில் செயல்முறைக் கல்வி, சமூகத் திறன்கள், இயக்கத்திறன்கள், கலைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. விளையாட்டுகளும் நீச்சல் பயிற்சிகளும் நிலையத்தில் வழங்கப்படுகின்றன. சிறப்புத் தேவையுடையோருக்குப் புதுவிதமான சிகிச்சைமுறைகள் நிச்சயம் கைகொடுக்கும் என்றார் ரேவன் ஆலோசனை நிறு வனத்தின் மூத்த ஆலோசகரும் உளவியலாளருமான திரு பிரவீன் நாயர்.
சிறப்புத் தேவையுடைய யார் வேண்டுமானாலும் புது சிகிச்சைகளின்வழி தங்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தலாம் என அவர் கருது கிறார்.
சிறப்புத் தேவையுடையவர்கள் சில சமயங்களில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த சிரமப்படலாம். அத்தகைய நேரங்களில் ஒரு குறிப்பிட்ட கலை வழியாக அவர்கள் தங்களின் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த முடியும்.
வார்த்தைகளால் அவர்கள் வர்ணிக்க முடியாத ஒன்றுக்கு, மாற்று சிகிச்சைமுறைகள் நன்மை பயக்கும். இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுடன் நன்றாக உரையாடவும் தங்களின் வாழ்க்கையை வழி
நடத்தவும் கற்றுக்கொள்வார்கள் என்கிறார் ஆலோசனை உளவியலாளரும் உளவியல் நிபுணருமான பத்மா ஜெய்ராம் (படம்).
சிறப்புக் கல்வித் துறையில் ஒன்பது ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரியும் அருள்குமரன் தங்கராசு, 34, "புதிய பாணியில் நடத்தப்படும் சிகிச்சைகள், சிறப்புத் தேவையுடையவர்களின் மனதை நிதானப்படுத்த உதவுகின்றன. மேலும், சிகிச்சை அளிக்கும் நேரத்தில் பாடங்களைக் கற்பிக்கும்போது அந்தப் பிள்ளைகள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்," என நம்புகிறார்.

