மோனலிசா
அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ள முருகன் திருக்குன்றம் கோயிலின் மாபெரும் குடமுழுக்கு நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை அதிகாலை 4.30 மணியளவில் ஆறாம் கால யாக பூஜைகள் தொடங்கவுள்ளன. கடம் புறப்பாடு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக குடமுழுக்கு காணும் இக்கோயிலில் இம்முறை சர்வசாதகமாக பொறுப்பேற்றிருப்பவர் பிள்ளையார்பட்டி கோயிலின் தலைமை அர்ச்சகர் டாக்டர் கே பிச்சை குருக்கள்.
குடமுழுக்கு நிகழ்விற்கு பின்னர் காலை 10 மணியளவில் கோவிலின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாலை 5 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும் வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருதலும் நடைபெறும்.
கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் தடைப்பட்ட இக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகள் இவ்வாண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
இக்கோவில் சிற்பங்களின் மறுசீரமைப்புகளை தமிழ்நாட்டின் திருக்கடையூரிலிருந்து வந்துள்ள சிற்பக்கலைஞர்களும் வண்ணப் பூச்சு கலைஞர்களும் மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவின் தலைமைச் சிற்பக்கலைஞர் திரு லோகநாதன் வாசுதேவன், 56, "இக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளை எட்டு மாத காலத்திற்குள் சிறப்பாக முடித்துள்ளோம். சிங்கப்பூரில் முதல்முறையாக இக்கோவிலில் சுவாமி ஐயப்பன் சன்னதியில் சபரிமலையில் இருப்பது போலவே பக்தர்கள் நடக்கும் வண்ணம் 18 படிகள் அமைத்து சுவாமியை சுற்றி வரும் வழித்தடமும் அமைத்துள்ளோம்," என்று கூறினார்.
இக்குடமுழுக்கு விழாவில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று தெரி விக்கப்பட்டது.
இவ்விழாவின் நேரலையை பின்வரும் யூடியூப் தளத்திலும் https://youtu.be/SmwLrnwz5N0 ஃபேஸ்புக் பக்கத்திலும் https://www.facebook.com/Muruganhilltemple பக்தர்கள் காணலாம்.
மேலும் குடமுழுக்கு விழாவில் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காக வாகன நிறுத்த வசதி செய்யப்படவில்லை என்றும் பக்தர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி விழாவுக்கு வருமாறும் கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

