ஆ. விஷ்ணு வர்தினி
செம்பவாங்கில் உள்ளது நெல்சன் பார் உணவகம். ஆண்டாண்டு காலமாய் சிங்கப்பூருக்கு வந்துசென்ற கப்பலோட்டிகள் விட்டுச்சென்ற கையெழுத்துகளும் தரைதட்டிய கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட பழமையான பொருள்களும் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சம்.
உலகெங்குமுள்ள கப்பலோட்டி களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள நெல்சன் உணவகத்தின் தொன்மையான வரலாற்றைக் காக்கும் நோக்குடன் விற்கப்பட இருந்த இத்தொழிலைக் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்று நடத்தி வருகிறார் விநோத் ரெட்டி.
ஜப்பானிய போர்க்கப்பல்களில் இருந்து செய்யப்பட்ட மேசைகள், நாற்காலிகள் போன்றவற்றிலும், கடைச் சுவர்கள், ஏன் நெல்சன் உணவகக் கூரையிலும்கூட தங்களது தடங்களைக் கையெழுத்துகளாக விட்டுச்சென்றுள்ளனர் தரைதட்டிய கப்பல்களைச் சேர்ந்த பல கப்பலோட்டிகள்.
கப்பல்களிலிருந்து எடுத்து வந்த மிதவைகளும் அக்காலத்தில் எடுக்கப்பட்ட கப்பல் புகைப்படங்களும் இவ்வுணகத்தை அலங்கரிக்கின்றன. பழங்காலத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் வகையில் கடையின் மொசைக் தரை, பழைய மர மேசைகள் ஆகியவற்றை மாற்றாமலும் சுவர்களுக்கு சாயம் பூசாமலும் வைத்துள்ளார் விநோத்.
செம்பவாங் பகுதியில் பிறந்து வளர்ந்த இவர், வழக்கமாக நெல்சன் உணவகத்துக்கு சென்றுகொண்டிருந்த காலத்தில், அப்போதைய கடை முதலாளி லாவ் பீ ஹியோங்கிடமிருந்து நெல்சன் உணவகத்தின் வரலாற்றை அறிந்தார்.
விலைமதிப்பில்லா மரபுடைமைப் பொருள்கள் நிறைந்த இந்த உணவகத்தை எடுத்து நடத்த 2018ல் அவர் முன்வந்ததற்கு இதுவே காரணம்.
"வெளியூர் மக்களுக்குத்தான் நெல்சன் உணவகத்தைப் பற்றி அதிகம் தெரியும். சிங்கப்பூரில் இறங்குவோர் கட்டாயமாகச் செல்லவேண்டிய இடமாக இதனை அவர்களது சமூகம் கருதுவதாக கப்பலோட்டிகள் என்னிடம் கூறுவர்," என்கிறார் 37 வயது விநோத்.
நெல்சன் உணவகத்தை ஓர் அருங்காட்சியகமாகவும் நினைவுப் பெட்டகமாகவும் கருதி இவர் பேணி வருகிறார்.
தாத்தா சுவரில் இட்ட கையெழுத்தை, மறைந்த உறவினர்கள் வரைந்து சென்ற சுவர் ஓவியங்களைத் தேடி, பல ஆண்டுகள் கழித்து நெல்சன் உணவகத்துக்கு வருவோரைச் சந்தித்து வியந்துள்ளார் இவர்.
நெல்சன் உணவகத்துடன் கொண்ட பிணைப்பால், கொவிட்-19 காலத்தில் ஓராண்டுக்கு தற்காலிகமாக இதனை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதிலும் விநோத் மனம் தளரவில்லை.
ஃபுட்பாண்டா முதலிய தளங்களின்மூலம் உள்ளூரில் நெல்சன் உணவகத்தை விளம்பரப்படுத்த முயன்றார்.
தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் கப்பலோட்டிகளுக்கான உணவகங்களைத் தொடங்க வேண்டும் என்பது விநோத்தின் விருப்பம்.

