சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் கவிஞர் தங்க. வேல்முருகனின் இரு கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 5வது தளத்திலுள்ள இமேஜினேஷன் அண்ட் பாசிபிலிட்டி அறைகளில் இவ்விழா நடைபெற்றது.
யாரோடும் பகையில்லை, உடையாத குமிழிகள் எனும் தலைப்பிலான நூல்களைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜோஸ்கோ பயண நிறுவன நிர்வாக இயக்குநரான நாகை தங்கராசு என்னும் போப் ராஜ் வெளியிட்டார்.
விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் நூல்களைக் கழகம் வெளியிடுவது இதுவே முதல் முறை என்று கூறினார். அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களின் இலக்கியங்களுக்கு வாய்ப்பளிப்பதால் தாங்களும் இவ்வாறு முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி அருணா கந்தசாமி யாரோடும் பகையில்லை என்னும் நூலையும் தகவல் தொழில்நுட்ப அதிகாரி கார்த்திக் சிதம்பரம் உடையாத குமிழிகள் என்னும் நூலையும் அறிமுகம் செய்தனர்.
கவிமாலை அமைப்பின் நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ, சென்னை தமிழ் அலை பதிப்பக உரிமையாளர் இசாக் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். கவிஞர் பாலமுருகன் வாழ்த்துக் கவிதை வாசித்தார். இறுதியாக ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தகவல், படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

