வி கே சந்தோஷ்குமார்
பாலஸ்டியர் ரோட்டில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத் திடலில் இன்று காலை 7.30 மணி முதல் இரவு ஏழு மணி வரை நடைபெறவிருக்கிறது வித்தியாசமான ஒரு கிரிக்கெட் போட்டி.
'தப்லா!', 'ஸீ எண்டர்டெய்ன்மெண்ட்', 'வெஸ்ட்லைட் அக்காமடேஷன்' தங்கு விடுதி நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக கிரிக்கெட் விளையாட்டாளர்களான அனிஷ் பராம், செல்லதுரை விஜயகுமார், சுரேஷ் அப்புசாமி, கார்த்திக் சுப்பிரமணியன் போன்றோரும் கலந்துகொள்கின்றனர்.
'டி10 வெஸ்ட்லைட்' ஒருங்கிணைப்புக் கிண்ணத்துக்கான போட்டியில் இவர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர்.
வெவ்வேறு பிரிவினர் பங்குகொள்ளும் இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான சிங்கப்பூர் அணியின் தலைவர் ஜீவன் சந்தானம், வளர்ந்துவரும் நட்சத்திர விளையாட்டாளர்கள் தக்ஷ் தியாகி, தேனுலா பாலசூர்யா, விதானா ஹியூவேஜ் ஆகியோரும் களம் இறங்குகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் பிரிவில் திலீபன் ஓமதுரை, சந்தோஷ் கோந்தினா, ஜி கே குமார், சுப்பிரமணியன் சங்கர், சுப்பையா முருகேசன், காளிமுத்து ரமேஷ் போன்ற புகழ்பெற்ற விளையாட்டாளர்களும் திறன் காட்டவிருக்கின்றனர்.
சிங்கப்பூரில் முதல்முறையாக நடைபெறவிருக்கும் இந்த ஒருங்கிணைப்புப் போட்டியில், வர்த்தக நிறுவனத் தலைவர்கள், தேசிய அணி விளையாட்டாளர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் ஓர் அணியாக இணைந்து பங்கெடுக்கின்றனர்.
"இவ்வாறு பலதரப்பட்ட பின்னணியைக் கொண்டவர்கள் ஒரு குழுவாகப் பங்கெடுக்கும் ஒருங்கிணைப்புக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இதுவரை கிரிக்கெட் உலகம் காணாத ஒன்றாக அமைந்திருக்கும்," என்று கூறினார் தப்லா!, தமிழ் முரசு ஆகியவற்றின் ஆசிரியர் ஜவஹரிலால் ராஜேந்திரன்.
பாலஸ்டியர் சூப்பர் கிங்ஸ், கன்ஸ்டரக்ஷன் ஆல்ரவுண்டர்ஸ், சிஎஸ்சி ட்ரூப்பர்ஸ், டிபிஎஸ் ஸ்பார்க்ஸ், தமிழ் தலைவாஸ், டிரான்ஸ்வேர்ல்ட் லயன்ஸ் என ஆறு அணிகள் இப்போட்டியில் பங்குகொள்கின்றன.
வெற்றிபெறும் அணிக்கு $2,500 ரொக்கப் பரிசும் இரண்டாம் நிலையில் இருக்கும் அணிக்கு $1,500 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
மேலும் போட்டியின் சிறந்த ஆட்டக்காரர், வெளிநாட்டு ஊழியர்களில் சிறந்த விளையாட்டாளர், சிறந்த பந்தடிப்பாளர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த திடல் ஆட்டக்காரர், 'மேன் ஆஃப் த மேட்ச்' எனப்படும் போட்டியின் ஆகச் சிறந்த விளையாட்டாளர் ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.
"டி10 என்பது எனக்குப் புதிய வடிவம். இதுவரை இத்தகைய போட்டியில் விளையாடியது இல்லை என்பதால் இப்போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்," என்று கூறினார் தேசிய, அனைத்துலகப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள அனிஷ் பராம். இவர் பாலஸ்டியர் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார்.
டிரான்ஸ்வேர்ல்ட் லயன்ஸ் அணிக்கு விளையாடும் ஜீவன், டி10 ஆட்டம் சுவாரசியமாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும் என்று கருதுவதாகக் கூறினார்.
பார்வையாளர்கள் இந்தப் போட்டியை நேரடியாகக் காண அனுமதி இலவசம்.
'ஸீ5 ஓடிடி' தளத்திலும் தப்லா!, தமிழ் முரசு ஃபேஸ்புக் பக்கங்களிலும் இதனை நேரலையாகக் காண முடியும். நேரலைக்குப் பொறுப்பேற்று உள்ளது ஸ்போர்ட்டிகோ நிறுவனம்.
இந்தியர் சங்கத்திற்கு அருகில் உள்ள சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் வெஸ்ட்லைட் தங்கு விடுதியைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் பொருதும் கிரிக்கெட் போட்டியும் நடைபெறும்.
இதில் ஏறக்குறைய 160 பேர் விளையாடுவர்.

