அனுஷா செல்வமணி
நம் மரபையும் பாரம்பரியத்தையும் முன்னிலைப்படுத்தி நடைபெற்ற சிங்கப்பூர் ஸ்டோரீஸ் 2022 எனும் ஆடை வடிவமைப்புப் போட்டியில் வாகை சூடி $5000 பரிசுத் தொகையைத் தட்டிச்சென்றார் ஆடை வடிவமைப்பாளரும் 'ஸ்டைல்மார்ட் பிரைடல்' நிறுவன இயக்குநருமான கவிதா துளசிதாஸ்.
'ஃபேஷன் யுனைடெட்' என்ற கருப்பொருளில் இடம்பெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் ஐந்து ஆடை வடிவமைப்பாளர்கள் சிங்கப்பூரை மையப்படுத்தி ஆறு விதமான ஆடைகளைத் தயாரித்தனர்.
ஆண்டுதோறும் 'சிங்கப்பூர் ஃபேஷன்' மன்றம் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது பதிப்பு ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மாலை இடம்பெற்றது.
இதில் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
'ஹெரிடேஜ் ரீஇன்டெர்பிரெடெட் அண்ட் பியோன்ட்' எனப் பெயரிடப்பட்ட கவிதாவின் ஆடைகள், சிங்கப்பூரின் ஆசிய வேர்களைப் பிரதிபலிக்கின்றன.
நம் முன்னோர்களின் கடும் உழைப்பிற்கு சமர்ப்பணமாக விளங்கும் இந்த ஆடைகள், உலகப் புகழ்பெற்ற 'பாரிஸ் ஃபேஷன் வீக் 2023' நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.
கவிதாவின் ஒவ்வோர் ஆடையிலும் துல்லியமான வடிவமைப்பும் சமகாலத் தாக்கமும் அமைந்துள்ளன. 'மிஸ் யுனிவர்ஸ் சிங்கப்பூர்' அழகிப் போட்டியின் முன்னாள் வெற்றியாளர்களும் தற்போதைய போட்டியாளர்களும் அணிந்து பவனி வந்த இவ்வாடைகள் ஆசிய கைவினைத்திறன், நீடித்த நிலைத்தன்மை, தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை எடுத்துக் கூறுபவை.
மூன்று தலைமுறைகளாக ஜவுளித் துறையில் ஈடுபட்டுவருகின்றனர் கவிதாவின் குடும்பத்தினர்.
1950களில் ஆகாயப்படை வீரர்களுக்காக இவரின் தாத்தா தொடங்கிய தையல் கடையான ஸ்டைல்மார்ட், கவிதாவின் தாயார் பொறுப்பேற்றபின் 'இந்திய பூட்டிக்' எனப் பெயர் மாற்றம் கண்டது.
பின்னர் 1999ல் 'ஸ்டைல்மார்ட் பூட்டிக்' கடையின் பொறுப்பைக் கவிதா ஏற்றுக்கொண்டார்.
குவோ பெய் எனும் சீன ஆடை வடிவமைப்பாளரின் வடிவமைப்புகள் தனக்கு உந்துசக்தி எனக் கூறும் இவர், சிங்கப்பூரில் ஆடை வடிவமைப்புத் துறைக்கு நல்ல அங்கீகாரம் உண்டு என்றார்.
"ஆசிய நாகரிக அரும்பொருளகம், சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் காட்சியளித்த சிங்கப்பூரின் பண்டைக் கால ஆடைகளின் தாக்கம் என்னுடைய ஆடைகளில் எப்போதும் இடம்பெற்றிருக்கும்," என்கிறார் கவிதா.
தென்கிழக்காசியாவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் அணியப்பட்ட ஒரு பார்சி ஆடையின் கைவினைத் திறனைத் தன் ஆடைகளில் புகுத்த இவர் விரும்புகிறார்.
கவிதாவிற்கு இந்தப் போட்டியில் நேரப் பற்றாக்குறை பெரிய சவாலாக இருந்தது.
போட்டியின்போது தீபாவளி நெருங்கிக்கொண்டு இருந்ததால் இவரது கடையில் பண்டிகைக் கால வியாபாரம் அதிகரித்திருந்தது.
இருப்பினும் தனது மகள் மற்றும் குழுவினரோடு இணைந்து மூன்று நாள்களில் இறுதிச் சுற்றுக்கான ஆடைகளை வடிவமைத்தார் கவிதா.
ஆடையலங்காரத் துறையில் நுழைய விரும்பும் இளையதலைமுறையினர் முதலில் நம் மரபை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் எனக் கூறும் கவிதா, "அடுத்த ஆண்டு 'பாரிஸ் ஃபேஷன் வீக் 2023' மூலம் வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்," என்றார்.