தமிழர் பேரவையின் வருடாந்திர பொதுக்கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி, தி பனானா லீஃப் அப்போலோ உணவகத்தில் நடந்தேறியது. பொதுக்கூட்டத்தின் போது பேரவை உறுப்பினர்களும் இணை அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து புதிய மேலாண்மை குழுவைத் தேர்ந்தெடுத்தனர்.
தமிழர் பேரவை, அனுபவத்தை பகிரும் அதே நேரத்தில் புதுமையையும் விரும்புவதாக தெரிவித்தது. புதிய மேலாண்மைக் குழுவில் அனுபவமிக்க உறுப்பினர்
களின் ஆதரவோடு சமூகத்திற்குச் சேவையாற்றும் பணி இளையர்களுக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, துணைத் தலைவர், பொதுச் செயலாளர், துணைச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளுக்கு இளைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பேரவையில், அதன் இளையர் அணியில் பங்காற்றிய அனுபவத்தைக்கொண்டு புதிய சிந்தனைகளுடன், புத்தாக்க எண்ணத்துடன் இந்த இளையர்கள் களம் இறங்கவுள்ளனர்.
இந்த இளம் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூத்த உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பர்.
கடந்த ஈராண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் எழுந்த சவால்களையும் தமிழர் பேரவை நன்றாகச் சமாளித்த விதம் பாராட்டக்கூடியது.
சமூகத்திற்குப் பல்வேறு வழிகளில் சேவைபுரியும் அதே வேளையில், வரும் ஆண்டுகளில் பேரவை கையாளக்கூடிய புதிய பொறுப்புகள் பற்றியும் மேலாண்மை உறுப்பினர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று தமிழர் பேரவை, முதல் முறையாக 'புரொஜக்ட் தானம்' என்ற ரத்ததான இயக்கத்தை சுகாதார அறிவியல் ஆணையத்தில் நடத்தவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்
பகல் 2 மணி வரை நடக்கும் இந்த ரத்த தான இயக்கத்தின் வாயிலாக தமிழர் பேரவை, சமூகத்தினரிடையே ரத்ததானம் செய்ய ஊக்குவிக்கிறது. மேலும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் ரத்ததான இயக்கங்களை தான் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்போவதாக தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
எழுபது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய பேரவை, தொடர்ந்து புத்தாக்கத்துடன் செயல்பட உறுதியளித்துள்ளது.
பேரவையின் ஆண்டு அறிக்கையை தமிழர் பேரவை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள லாம் (https://trc.org.sg/) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

