இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து, மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அங் மோ கியோ தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்தது.
அங் மோ கியோவாசிகளுக்குக் கிறிஸ்துமஸ் உணர்வைக் கொண்டு சேர்க்கும் வகையில், கடந்த 17ஆம் தேதி மதியம், அங் மோ கியோ சென்ட்ரல் ஸ்டேஜ் அருகிலும் அங் மோ கியோ ஹப் கடைத்தொகுதிக்கு வெளியிலும் தமிழ் மெதடிஸ்ட் திருச்சபைக் குழுவினர் கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடி, கிறிஸ்துமஸ் பரிசுப்பொருள் களை விநியோகித்தனர்.
அங் மோ கியோ தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகிய மூன்று மெதடிஸ்ட் திருச்சபைகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கொண்டாட்டத்தில், மூன்று மொழிகளிலும் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
தமிழ்த் திருச்சபை அன்பளிப்புப் பைகளையும் பொட்டலங்களையும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கியது.
கிறிஸ்துமஸ் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளும் விதமாக தமிழ்த் திருச்சபையின் பாடகர் குழு கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அதிர்ஷ்ட குலுக்கு இடம்பெற்றது.
அங் மோ கியோ வட்டாரவாசியான திருமதி தெய்வானை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இயேசுவைக் குறித்து பாடப்பட்ட கீதத்தைத் கேட்டு தாம் மகிழ்ந்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 18ஆம் தேதியன்று, அங் மோ கியோ தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை வெவ்வேறு இடங்களில் மூன்று கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது.
சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு பெண் ஊழியர்களும் அங் மோ கியோ வட்டாரத்தின் பெண்களும், பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டத்தில், ஒன்றிணைந்தனர்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வரும் பணிப்பெண்கள், தாதியர், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் பெண்கள் என பலதரப்பு வெளிநாட்டு ஊழியர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு ஆடல், பாடல், விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு அங் மோ கியோ தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை பெண்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் 44 வயது திருமதி புகழேந்திரன் மேரி, "என்னைப் போன்ற பெண்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்நிகழ்ச்சியில் பொழுதை மகிழ்ச்சியாகக் களித்ததோடு மற்ற பெண்களோடு நட்புறவையும் வளர்த்துக்கொண்டேன்," என்றார்.
மாலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் உணர்வைக் கொண்டு சேர்க்கும் வகையில், அங் மோ கியோ தமிழ், சீன மெதடிஸ்ட் திருச்சபை குழுவினர் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடி அவர்களை மகிழவைத்ததோடு, அவர்களுக்கு இரவுணவும் வழங்கினர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட, கட்டுமானத் துறை ஊழி யரான 40 வயது திரு மருதுமுத்து நடராஜன், "சீன நண்பர்களோடு இணைந்து இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருக்கும் எங்களுக்கு இது ஒரு புது அனுபவமாகவும் அமைந்தது," என்றார்.
செங்காங் வட்டாரவாசிகளுக்கும் அங் மோ கியோ தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை கிறிஸ்துமஸ் உணர்வை கொண்டு சேர்த்துள்ளது. செங்காங் தமிழ் திருச்சபை தொண்டூழியர்களும் செங்காங் மெதடிஸ்ட் திருச்சபை தொண்டூழியர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கொண்டாட்டம், சிறுவர்களையும் பெரியவர்களையும் ஈர்த்தது.
மாயாஜால நிகழ்ச்சி, பலூன் பொம்மைக் கூடம், விளையாட்டுகள், கலை, கைவினைக் கூடம், கிறிஸ்துமஸ் கீதங்கள் ஆகியவை சிறப்பு அம்சங்களாக நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். சிறுவர்கள் அவரு டன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
"விழாக் காலத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் நோக்கத் தில், இவ்வாண்டு நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம்.
"அனைவரையும் உள்ளடக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன என நம்புகிறோம்," என்றார் அங் மோ கியோ தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை குழுவின் தலைவரான 46 வயதாகும் திரு ஆசிர் ஜெயராஜ்.

