அனுஷா செல்வமணி
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கும்.
கோள்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சோதிடத்தைச் சிலர் இதற்காக நாடுவதுண்டு.
ஆனால், ஒருவர் தேர்ந்தெடுக்கும் ‘டாரட்’ அட்டைகளின் அடிப்படையில் ஆலோசனை கூறுவதுடன் தகுந்த மதுபானக் கலவைகளையும் (காக்டெயில்) தயாரித்து அளிக்கும் மதுக்கூடம் ஒன்று சிங்கப்பூரில் இருக்கிறது.
‘திரீ ஆஃப் கப்ஸ்’ என்பது இதன் பெயர். இந்த மதுக்கூடத்தின் உரிமையாளர் ஷாமினி ஈஸ்வர தாஸ்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் முதன்மை விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய இவருக்கு 22 ஆண்டுகளில் 30க்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுவந்த அனுபவம் உண்டு.
ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குமுன் தோழிகளுடன் பொழுதுபோக்கிற்காக ‘டாரட்’ கணிப்பு பெறச் சென்ற இவர், நாளடைவில் அதை நம்பத் தொடங்கினார்.
விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவது கைகூடிய கனவு என்றாலும் உணவு, பானத் துறை சார்ந்த வர்த்தகத்தை சொந்தத் தொழிலாக நடத்தும் விருப்பமும் ஷாமினிக்கு இருந்தது.
எனவே ‘டாரட்’ ஆருட சீட்டுக்கட்டை மையமாகக் கொண்ட இந்த மதுக்கூடத்தை தோழியர் இருவருடன் இணைந்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறந்தார்.
இதில், வாடிக்கையாளர்கள் 12 ‘டாரட்’ அட்டைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்த அட்டைக்கு ஏற்ப மதுபானம் கலந்து தரப்படும்.
‘திரீ ஆஃப் கப்ஸ்’ எனும் சொற்றொடர், மகிழ்ச்சி, கொண்டாட்ட உணர்வு, வெற்றி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. எனவே தனது மதுக்கூடத்திற்கு இப்பெயரைச் சூட்டியதாக ஷாமினி குறிப்பிட்டார்.
மதுக்கூடத்தில் ‘டாரட்’ கணிப்பை வழிநடத்த வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 15 ‘டாரட்’ கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்தச் சேவை, வாரத்தில் மூன்று நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ‘டாரட்’ கணிப்பு அமர்வும் எட்டு முதல் பத்து நிமிடம் வரை நீடிக்கக்கூடும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இந்த மதுக்கூடத்தில் பகுதிநேரமாக ‘டாரட்’ ஆருடம் செய்துவரும் துர்கா, 29, தனது வேலை சுவாரசியமானது என்று கூறினார்.
மதுக்கூடத்தில் சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் பற்பல காரணங்களுக்காக ‘டாரட்’ ஆருடத்தை நாடுவதாகவும் முடிந்த அளவு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் இவர் கூறினார்.
உள்ளூரில் விற்கப்படும் மூலப்பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘காக்டெயில்’ மதுபானங்கள் தனித்துவமான வண்ணங்களிலும் சுவைகளிலும் அமைந்துள்ளன.
வாடிக்கையாளர்கள் சிலர் தங்களின் சிறப்புக் கொண்டாட்டங்களையும் இந்த மதுக்கூடத்தில் நடத்துவதாகக் கூறினார் ஷாமினி.
தோழிகள் இந்த வர்த்தகத்தில் இருந்து விலகியபோதும் கணவர், எட்டு வயது மகள், பெற்றோர் ஆகியோரின் ஆதரவுடன் இவர் இந்த மதுக்கூடத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
முதல்முறையாக வர்த்தகத்தில் இறங்கிய ஷாமினிக்கு சவால்கள் இருக்கவே செய்தன.
மதுக்கூடம், கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் திறக்கப்பட்டதால் பல கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன. அவை வர்த்தகத்தை வெகுவாகப் பாதித்தன.
ஆணாதிக்கம் மிகுந்த துறையில் இருப்பதால் இந்திய சமூகத்தினரின் ஆதரவு குறைவாக உள்ளது என்கிறார் ஷாமினி.
இன்னல்கள் பல குறுக்கிட்டாலும் இவர் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதிலும் ஆசியாவின் தலைசிறந்த 50 மதுக்கூடங்களில் ‘திரீ ஆஃப் கப்ஸ்’ மதுக்கூடத்தை இடம்பெறச் செய்வதிலும் முனைந்துள்ளார்.
ஏறத்தாழ 12 ஆண்டுகளாக ‘பார்டெண்டர்’ எனும் மதுக்கூடத்தில் மதுபானங்களை விநியோகிக்கும் பணியில் இருக்கும் செல்வகுமார் மணிமாறன், 31, ‘திரீ ஆஃப் கப்ஸ்’ திறக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார்.
இதற்கு முன்னர் ‘டாரட்’ பற்றிக் கேள்விப்பட்டிராத இவர், இது வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்கும் ஒரு வித்தியாசமான முயற்சி என்றார்.
‘டாரட்’ ஆருடம்மீது அதிக ஆர்வம் கொண்ட 21 வயது வாடிக்கையாளர் ப்ரீத்தி, இந்த மதுக்கூடத்தில் இருக்கும் புது விதமான காக்டெயில் மதுபானங்கள் தனித்துவம் வாய்ந்தவை என்றார்.
‘டாரட்’ ஆருடம் பற்றி இந்த மதுக்கூடத்தின் மூலம்தான் அறிந்துகொண்டதாகக் கூறும் இவர், அதைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.