வாடகை வீட்டில் வசிக்கும் சிறாரிடையேயும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைச் சிறு வயதிலேயே விதைக்க வேண்டும் என்ற சமூக முனைப்புடன் ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள 269A, 269B ஆகிய புளோக்குகளின் கீழ்த்தளங்களில் செயல்படுகிறது 'வாயிட் டெக் டெக்னாலஜி லேப்ஸ்' திட்டம்.
இத்திட்டத்தை 'பைட்.எஸ்ஜி' என்ற சமூக நிறுவனம், 2021ஆம் ஆண்டு தொடங்கியது. நிறுவனத்தின் இணை நிறுவனரான 43 வயது ஷேக் இஸ்மாயில் (படம்), 16 ஆண்டுகளாக 'அக்சென்ச்சர்' எனும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டூழியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சக ஊழியர்கள் 11 பேருடன் கைகோத்து, இந்தச் சமூக நிறுவனத்தைத் தொடங்கினார்.
சிறுவர்கள் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் அவர்களின் தொழில்நுட்ப ஆற்றலை வலுவாக்கவும் வகைசெய் கிறது 'பைட்.எஸ்ஜி'.
தொடர்ந்து மாற்றமடையும் தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்களை வீட்டிலேயே கற்றுக்கொள்ளும் சூழல், வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இருக்காது என்பதால் இந்தத் திட்டம் அதற்குக் கைகொடுக்கும் என்கிறார் ஷேக்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 50,000 குடும்பத்தினர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இத்தகைய வீடுகளில் வசிக்கும் சிறுவர்கள், பள்ளியில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை, தொடர்ந்து வீடுகளிலும் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இந்நிலையில் வீட்டின் கீழ்த்தளத்தில் நடத்தப்படும் பாடங்கள் மூலம் இவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
'பைட்.எஸ்ஜி' நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், 100க்கு மேற்பட்ட மாணவத் தொண்டூழியர்கள், ஏறக்குறைய 25 நிறுவனத் தொண்டூழியர்கள் ஆகியோர் வாரம் ஒருமுறை அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை சிறுவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.
ஏழிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இந்த 48 வாரத் தொழில்நுட்பத் திட்டம் மூலம், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஒட்டி ஆறு பாடங்களைக் கற்றுக்கொள்வர்.
கணினிக் குறியீட்டு முறை, எளிதான வடிவில் இணையத்தளம் உருவாக்குதல், மின்னிலக்க ஓவியங்கள் வரைதல், விளையாட்டு வடிவமைப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.
சிறுவர்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு 'காஹுட்' போன்ற இணைய விளையாட்டுத் தளங்கள் மூலமும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் ஒரு பாடத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார் ஷேக்.
சிறுவர்களுக்கு எளிதான வகையில் கணினி நிரலாக்கமும் கற்றுத்தரப்படுகிறது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான ஷேக், தன் பிள்ளைகளுக்கும் தொழில்நுட்ப விழிப்புணர்வை இளம் வயதிலேயே புகுத்தியுள்ளார்.
வானூர்தி இயக்கவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பம் இன்றியமையாத ஒரு தேவை என்பதால் இந்த லாபநோக்கமற்ற சமூகத் தொண்டில் முழுவீச்சாக இறங்கியுள்ளதாகக் கூறினார்.
தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதாரத் தகவல் கட்டமைப்பில் முழுநேர மருத்துவச் சிறப்புப் பிரிவின் இயக்குநராகப் பணிபுரிகிறார் ஷேக்.
வருங்காலத்தில், மேம்பட்ட இயந்திரவியல் அம்சங்கள் போன்றவற்றைச் சிறுவர்களிடம் கொண்டுசேர்ப்பது இவரது இலக்கு.
'டிஜிட்டல் ஃபார் லைஃப்' என்ற வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்கத்தின் பங்காளியான 'பைட்.எஸ்ஜி' நிறுவனத்தைப் பார்வையிட, அதிபர் ஹலிமா யாக்கோப் கடந்த வியாழக்கிழமை மாலை ஈசூனில் அமைந்துள்ள வளாகத்திற்கு வருகை புரிந்திருந்தார்.
இது அதிபரின் இந்தாண்டுக்கான முதல் சமூக ஈடுபாட்டுத் திட்டம்.
திட்டத்தின் மூலம், இதுவரை ஏறத்தாழ 110 சிறுவர்கள் பலனடைந்துள்ளனர். ஈசூன்-இனோவா தொடக்கக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் ஷேஷானி அன்னே கொல்வின்,17, மூன்று வாரங்களாக இங்கு மாணவத் தொண்டூழியராக இருக்கிறார்.
தமிழ் முரசிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், சிறுவர்களுடன் உரையாடி, தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களைக் கற்றுத்தருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் எதிர்காலத்தில் தான் ஓர் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு இது தன்னைத் தயார்ப்படுத்தும் என்று நம்புவதாகவும் கூறினார்.
செய்தி, படம்:
அனுஷா செல்வமணி

