புல்லாங்குழல் இசையின் தொடக்கத்தையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் முயற்சியாகப் படைக்கப்பட்டது 'வேணு நாதம்' இசை நிகழ்ச்சி. மூங்கில் புல்லாங்குழல்களின் தனித்துவமான இந்திய இசை பாணிகளை இதில் மேடையேற்றியது பிரம்மாஸ்திரா இசைக்குழு.
ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் இம்மாதம் 8ஆம் தேதி, தேசிய கலை மன்றத்தின் ஆதரவுடன் இக்கச்சேரி நடைபெற்றது.
'த வம்ஷிகா குயின்டெட்' எனும் பெயரின்கீழ் இணைந்துள்ள இளம் புல்லாங்குழல் கலைஞர்கள் ஐவரும் இதில் தங்கள் தனித்திறன்களை வெளிக்காட்டினர்.
இவர்களுடன், ரிட் சூ, ஜேக்கி எங் போன்ற உள்ளூர்க் கலைஞர்களும் கச்சேரிக்குக் களை கூட்டினர். மொத்தம் ஒன்பது கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை, டாக்டர் கானவிநோதன் ரத்னம் வழிநடத்தினார். ஐந்து பாகங்களாக படைக்கப்பட்ட 'வேணு நாதம்', இசைப் பண்பாடுகளைப் பின்பற்றியதுடன் நவீன இசையின் தாக்கங்களையும் கொண்டிருந்தது.
ஏறக்குறைய ஆறு மாத முதற்கட்ட பணிகளுக்குப் பின்னர், இரண்டு மாத காலம் பயிற்சியும் ஒத்திகையும் மேற்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள்.
"புல்லாங்குழல் வாசிக்கும் நாங்கள் ஐவரும் வெவ்வேறு பாணி கொண்டவர்கள். ஆகையால், இப்படைப்புக்காக ஒன்றிணைந்தது வேறுபட்ட அனுபவமாக இருந்தது. குறுகிய காலத்தில் பயிற்சி மேற்கொண்டு இப்படைப்பை வெற்றிகரமாக மேடையேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார், வேணு நாதம் கச்சேரியின் தயாரிப்பாளரும் புல்லாங்குழல் கலைஞருமான 29 வயது நிரஞ்சன் பாண்டியன்.
இதற்கு முன்னர் 2016ல் முதல்முறையாக படைக்கப்பட்டது 'வேணு நாதம்'. அந்தக் கச்சேரியைக் காட்டிலும் இரண்டாவது முறை நடைபெற்ற இக்கச்சேரியில் மேற்கத்திய இசை பாணியின் அம்சங்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன.
கர்நாடக சங்கீதக் கட்டமைப்பில் கலவை பாணியிலான இசையைப் படைக்க முயற்சி செய்ததாகக் கூறினார் நிரஞ்சன்.
பார்வையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததாகக் கூறினார் இவர்.
அதனால் வரும் ஆண்டுகளில் வேணு நாதத்தின் மூன்றாவது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் திட்டம் இருப்பதாகவும் நிரஞ்சன் குறிப்பிட்டார்.
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

