ஆ. விஷ்ணு வர்தினி
திருவாட்டி காளிமுத்து சாரதாவிற்கு மொத்தம் 16 பிள்ளைகள். இவர்களில் நால்வர் மட்டுமே அவரது சொந்தப் பிள்ளைகள்; மற்ற 12 பேரும் அவரால் குழந்தை பருவத்திலிருந்தோ, பதின்ம வயதிலிருந்தோ வளர்க்கப்பட்டோர்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட 83 வயது திருவாட்டி சாரதாவிற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழியர்கள், பங்காளிகளுக்கான விருது வழங்கும் விழாவில் தலைசிறந்த வாழ்நாள் தொண்டூழியர் விருது வழங்கப்பட்டது.
சாரதாவின் சொந்த மகள் விஜயலட்சுமியே இந்த நீண்ட, நிறைவான பயணத்துக்கு வித்திட்டவர். 1969ஆம் ஆண்டில் முதல் முறையாக குறைமாதக் குழந்தை ஒன்றைப் பார்த்துக்கொள்ள வாய்ப்பு அமைந்தது. அவருடன் அக்குழந்தையைப் பார்க்க கே.கே. மருத்துவமனைக்குச் சென்றிருந்த விஜயலட்சுமி கட்டாயம் அவளை வளர்த்தாக வேண்டும் என்று அடம்பிடித்திருந்தார்.
“விஜயாவுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. அப்போது கையளவே இருந்த விமலாவை (உண்மை பெயரல்ல) வீட்டிற்குக் கொண்டு வந்து என்னோடு சேர்ந்து என் மகளும் வளர்த்தாள்,” என்றார் சாரதா.
துரதிர்ஷ்டவசமாக, ரயில் விபத்தொன்றில் சிக்கி விஜயலட்சுமி 1976ல் மறைந்தார். அந்த இழப்பை இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியாத திருவாட்டி சாரதா, அவரின் நினைவிலேயே அடுத்த 11 குழந்தைகளையும் வளர்க்க தொடங்கியதாகவும், அவர்களுக்காகவே வாழத் தொடங்கியதாகவும் கூறி நெகிழ்ந்தார்.
மலேசியாவில் பிறந்த சாரதா, ஆறு சகோதரர்களுடன் மொத்தம் 12 குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். தனது நான்கு பிள்ளைகளும் பிறந்த பின்னர், ‘அல்மோனர்’ எனப்படும் அக்கால மருத்துவ சமூக சேவையாளராக இயங்கிய உறவினர் ஒருவரின் அனுபவத்தைக் கண்டு குழந்தை வளர்ப்பில் இறங்கினார்.
ஒரு காலத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட ஆறு பிள்ளைகள் வரை சாரதாவின் வீட்டில் ஒன்றாக வாழ்ந்தனர். “குழந்தைகளை வளர்க்கும்போது எனக்கு சோர்வே ஏற்படாது. காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து நள்ளிரவு வரை வேலை பார்ப்பேன். என் கணவரும் எங்களது வளர்ப்பு பிள்ளைகள்மீது அதிக பாசம் வைத்திருந்தார்,” என்றார் சாரதா.
மகள் விஜயலட்சுமி மறைந்த நிலையில் வளர்ப்பு மகளான விமலாவுடன் அவரின் மறைவு வரை சாரதா நெருக்கமான தொடர்பில் இருந்தார். அவரின் குடும்பத்தாருடன் விமலாவும் அவரின் தாயாரும் தீபாவளிப் பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடியதை சாரதா நினைவுகூர்ந்தார்.
1993ல் தனது கணவரின் மறைவுக்குப் பிறகு தனியாக வாழ்ந்துகொண்டிருந்த சாரதா, அடுத்த சில ஆண்டுகளில் தனது கடைசி வளர்ப்பு மகன் டேனியலை (உண்மைப் பெயர் அல்ல) பார்த்துக்கொள்ள தொடங்கினார். அச்சமயத்தில், அவரது மூன்று பிள்ளைகளும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றிருந்தனர். அவருக்கு அப்போது கிட்டத்தட்ட 60 வயது.
கடந்த 25 ஆண்டுகளாக சாரதாவின் பராமரிப்பில் உள்ள டேனியல், சிறப்புத் தேவை உள்ளவர். அவரை ஆறாண்டுகளுக்கு முன் சட்டபூர்வமாக தத்தெடுத்துக் கொண்டார் சாரதா.
சாரதாவின் பயணம் அவரது மூத்த மகன் பாலசுப்பிரமணியத்தையும் ஊக்குவித்தது. ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அம்மாவின் வழியிலேயே அவரும் அவரது மனைவியும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினர்.
“என் பள்ளிப் பருவத்திலிருந்தே அம்மா குழந்தைகளைப் பராமரித்து வருகிறார். அதன் தாக்கத்தாலேயே குழந்தை வளர்ப்பில் நானும் இறங்கினேன்,” என்றார், தற்போது இரு நடுத்தர வயது பிள்ளைகளுக்கும் ஒரு வளர்ப்புப் பிள்ளைக்கும் தந்தையான 65 வயது பாலசுப்பிரமணியம்.
சாரதாவுக்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் இதயம் தொடர்பிலான சிக்கல் ஏற்பட்டு இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்) சாதனத்தைப் பொருத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது குறித்து பேசுகையில், “எனது சொந்த பிள்ளைகள் கரையேறிவிட்டனர். டேனியலுக்காகவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
சன்டெக் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார் திருவாட்டி சாரதா.