நோய்ப்பரவல் சூழலுக்குப் பின்னர் களைகட்டிய பொங்கல் விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர் சிங்கப்பூர் சமூகத்தினர். அவர்களில், குடும்பங்களைப் பிரிந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கென இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து தெருசான் பொழுதுபோக்கு நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னெடுத்தது ‘பிக் ஏட் ஹார்ட்’ எனும் லாபநோக்கமற்ற அமைப்பு. இம்மாதம் 15ஆம் தேதி இடம்பெற்ற இந்த நிகழ்வில் 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மொத்தம் ஒன்பது சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும் தொண்டூழியர்களும் விழா ஏற்பாடுகளில் கைகொடுத்தனர். சிங்கப்பூர் கன்னட சங்கம், சிங்கைத் தமிழ்ச் சங்கம், இந்திய பெண்கள் சங்கம், கமலா கிளப், சிங்கப்பூர் சிந்தி சங்கம், சிங்கப்பூர் தெலுங்கானா கலாசார மன்றம், சிங்கப்பூர் மலையாளி சங்கம், சிங்கப்பூர் மஹாராஷ்டிர மண்டல், இந்தியன்.எஸ்ஜி ஆகிய அமைப்புகள் பல்வேறு பாரம்பரிய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தன.
உறியடி, கோலி, பம்பரம் முதலிய விளையாட்டுகளில் கலந்துகொண்டும் பொங்கல் வைத்தும் கோலமிட்டும் மகிழ்ந்தனர் ஊழியர்கள். பாரம்பரிய நடனங்களையும் நண்பர்களுடன் ஆடிக் களித்தனர்.
பயன்படுத்தப்பட்ட ஆடைகள், துணிப்பைகள், தண்ணீர்ப் புட்டிகள் ஆகியவற்றை மக்களி டமிருந்து சேகரித்து இவ்விழா வில் சிங்கைத் தமிழ்ச் சங்கத் தின் இளையர் பிரிவும் சிங்கப்பூர் சிந்தி சங்கமும் விநியோகித்தன.
2020ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் விழாக்காலத் திட்டங்களை நடத்தி வரும் பிக் எட் ஹார்ட் அமைப்பு, மனிதவள அமைச்சின் கோரிக்கைக்கு ஏற்ப முதன்முறையாக இவ்வாண்டு பொங்கல் தின விழாவை ஏற்பாடு செய்தது.