சிறு வயதில் உற்ற தோழிகளாகப் பழகி, பின்னர் பிரிந்த திருவாட்டி சாந்தா குருநாதன் திருவாட்டி அலிஜா பாஜி ஆகிய இருவரும் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர்.
கணவரின் மறைவுக்குப் பின் தனியாக வாழ்ந்து வந்தார் சாந்தா. அவரின் வீட்டிற்கு என்டியுசியின் தோழமைத் திட்டத்தின் தொண்டூழியராக கடந்த ஆண்டு சென்றிருந்தார் அலிஜா. உணவுப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக சென்ற அவர், முதலில் திருமதி சாந்தாவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அலிஜா, ‘சாந்தா’ என்ற தம்முடைய உற்ற தோழியின் கடந்தகால நினைவுகளைத் தம்மோடு பகிர்ந்துகொண்டபோதுதான் ‘ஜா’ என்று தாம் செல்லமாக அழைக்கும் உயிர்த் தோழியை அடையாளம் கண்டு மெய்சிலிர்த்துப் போய் ஆனந்தத்தில் அலிஜாவைக் கட்டித் தழுவி அழுததாகக் கூறினார் சாந்தா.
வேலையிட விபத்து ஒன்றில் சிக்கியதால் சாந்தாவுக்கு முகத்திலும் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அச்சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதனால் சாந்தாவின் முகத்தில் நிறைய தீக்காயங்கள் இருக்கும் என்று நினைத்திருந்தார் அலிஜா. சாந்தா தமது காலில் தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டியபோதுதான் அலிஜா அவரை அடையாளம் கண்டுகொண்டார்.
68 வயது சாந்தா மற்றவர்களுடன் எப்போதுமே மிக நட்பாகப் பழகும் குணமுடையவர் என்று கடந்த மூன்றாண்டுகளாக என்டியுசியின் தோழமைத் திட்டத்தில் தொண்டூழியராக இருந்துவரும் அலிஜா தெரிவித்தார்.
“முன்பு சாந்தாவுக்கு நீளமான முடி இருக்கும். அவர் இருக்கும் இடத்தில் பலத்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும். அவரது மலர்ந்த முகம் மட்டும் இன்னும் மாறவில்லை,” என்று கூறிச் சிரித்தார் அலிஜா.
அலிஜாவும் சாந்தாவும் பதின்ம வயதிலிருந்தே புக்கிட் மேரா பகுதியில் அமைந்திருந்த ‘நேஷனல் செமிகான்டக்டர்’ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.
மேலும் திருவாட்டி ஃபரிதா லாவி, திருவாட்டி ஜெயமணி ஆகியோரைச் சேர்த்து, நால்வரும் 1970களில் சில ஆண்டுகாலமாய் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.
தினமும் தொழிற்சாலைக்கு அருகே இருந்த உணவங்காடியில் பொழுதைக் கழிப்பது, வீட்டிற்கு ஒன்றாக நடந்து செல்வது, கொண்டாட்டங்களுக்குச் சேர்ந்து செல்வது, பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே சுற்றுவது என உல்லாசமாய்க் கழிந்தன இவர்களின் இளமைக்காலம். திருமணமான பின்னர் நால்வரும் நான்கு திசைகளில் சென்றுவிட்டனர்.
தம்முடன் இந்நாள் வரை தொடர்பில் இருக்கும் ஃபரிதாவையும் அண்மையில் சாந்தாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அலிஜா.
“திருமணமான பிறகு நான் என் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை. உயிர்த்தோழிகளான இவ்விருவரையும் மீண்டும் பார்த்தபின் எங்களின் இளமைக்கால நினைவுகள் கண்முன் அலைமோதின. இளமை திரும்புவது போன்றும் புத்துயிர் பெற்றது போன்றும் இருக்கிறது,” என்று நெகிழ்ந்தார் சாந்தா.
ஒருகாலத்தில் மிகத் துடிப்பாகவும் குறும்புத்தனமாகவும் இருந்த சாந்தா, ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்த தம் கணவரின் நினைவுகளுடனும் மிகச் செல்லமாக வளர்க்கும் தம் செடிகளுடனும் இன்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
கால்கள் இரண்டிலும் வீக்கம் ஏற்பட்ட காரணத்தினால் முன்புபோல அவரால் இயல்பாக நடக்க முடிவதில்லை; விரும்பிச் செய்யும் சமையலிலும் ஈடுபட முடிவதில்லை. திருமணமான இரு பிள்ளைகளையும் அவர் அவ்வப்போது சந்திப்பதுண்டு.
இத்தகைய தனிமையான சூழலில் மாதம் இருமுறை தம்மை வந்து சந்திக்கும் இரு தோழிகளையும் நம்பிக்கைத் தூண்களாக அவர் கருதுகிறார்.
திருவாட்டி சாந்தாவுக்குப் பிடித்தமான கடலை போன்ற தின்பண்டங்களை வாங்கி வருவதும் அங்கு வந்து சால்வைகள் பின்னுவதும் அலிஜாவுக்கும் ஃபரிதாவுக்கும் இப்போது வழக்கமாகிவிட்டது.
மாதம் இரு முறை சந்தித்தாலும் தினமும் கைப்பேசி மூலம் தொடர்பில் இருப்பதாக கூறினர் இருவரும்.
எவ்வளவோ முயன்றும் தோழி ஜெயமணியை இன்னமும் கண்டுபிடிக்காத இம்மூவரும், தொடர்ந்து அவரைத் தேடும் முயற்சியில் உள்ளனர்.
என்டியுசியின் தோழமைத் திட்டத்தில் தொண்டூழியராக இணைய https://ntuchealth.sg/volunteer எனும் இணையத் தளத்தை நாடலாம்.