அனுஷா செல்வமணி
தொழில்நுட்ப ஆர்வலர்களை ஈர்க்கும் கடைத்தொகுதியாகப் பல ஆண்டு காலமாக விளங்கி வந்தது சிம் லிம் ஸ்குவேர். எண் 1 ரோச்சோர் கேனல் சாலையில் அமைந்துள்ள இந்த 41 ஆண்டு பழமைவாய்ந்த கடைத்தொகுதி, ஒரு காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் வந்து குவியும் இடமாக இருந்த நிலை மாறி இன்று வாரயிறுதி நாட்களில்கூட வெறிச்சோடி காணப்படுகிறது.
இங்கு 2014ல் செயல்பட்ட திறன்பேசிக் கடை ஒன்று, வியட்னாமிய வாடிக்கையாளரை ஏமாற்றிய சம்பவத்துக்குப் பிறகு இந்தக் கடைத்தொகுதிக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது என்று கூறினார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வரும் 'பிஸ்கிராம் ஏஷியா' கடையின் இயக்குநர் நீரஜ் அகர்வால்.
இருப்பினும், சவால்களுக்கிடையே சிம் லிம் ஸ்குவேரில் பல இந்திய கடைகளை, முக்கியமாக நான்காவது, ஐந்தாவது தளங்களில் காண முடிந்தது.
'ஒருவர் வருவதே அரிது'
திறன்பேசி பழுதுபார்க்கும் கடை ஊழியரான 60 வயது டேவ், இங்கு கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். முன்பைக் காட்டிலும் வியாபாரம் தற்போது 70% சரிந்துவிட்டது என்ற அவர், ஒரு நாளில் ஒரு வாடிக்கையாளர் வருவதே அரிது என்றார். நோய்த்தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சுற்றுப்பயணிகளைக் காணமுடிவதில்லை என அவர் கூறினார்.
'பெஸ்ட் லேப்டாப்ஸ்' கடையைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவரும் உரிமையாளர், ராஜாராஜா, 42, கொள்ளைநோயின்போது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தவாறே வேலை பார்த்ததால், வியாபாரம் சிறப்பாக இருந்தது என்றார். தம் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள், அல்லது விடுமுறைக்கு இந்தியாவிற்குச் செல்பவர்கள் என்று பகிர்ந்தார். குறைந்தது 10 வாடிக்கையாளர்களை அன்றாடம் சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
மின்வர்த்தகத்தால் வியாபாரச் சரிவு
நோய்த்தொற்றுக் காலத்திற்குப்பின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது என்ற 42 வயது முகம்மது யூனோஸ், 13 ஆண்டுகளாக சிம் லிம் ஸ்குவேர் இரண்டாவது தளத்தில் 'சிஸ்டமேட் சாஃப்ட்வேர் சொலுஷன்ஸ்' கடையை நடத்திவருகிறார். மாத வாடகையாகக் கிட்டத்தட்ட $4,000 செலுத்தும் இவர், தமது வழக்கமான வாடிக்கையாளர்கள் மட்டுமே வருவதாகக் கூறினார். மின்வர்த்தகம் தலைதூக்கிய காரணத்தால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதில்லை என்றார்.
அதேபோல் வழக்கமான உள்ளூர் வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குத் தொடர்ந்து வருவதால் தொற்றுக் காலத்திற்கு முன்னரும் பின்னரும் வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை என்றார், 20 ஆண்டுகளாக கணினிப் பழுதுபார்ப்பிலும் விற்பனையிலும் ஈடுபட்டுவரும் 'கொம்பியூஆசியா மார்க்கெட்டிங், சிஸ்டம்ஸ்' கடையின் மேலாளர் முஹம்மது ரிப்டீன், 49.
வார நாட்களில் காலையிலும் பிற்பகலிலும் வேலை காரணமாக வாடிக்கையாளர்கள் வராவிட்டாலும் மாலை வேளையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவு என 'மைபீசீ பிரைவேட் லிமிடெட்' உரிமையாளர் இப்ராஹிம், 42, கூறி வருந்தினார்.
ஓரளவுக்கு உதவிய தொற்றுக்காலம்
நோய்த்தொற்றுக்கு முன்பு வீட்டில் இருந்தவாறே வேலை செய்யும் நடைமுறை அறிமுகமாகாத பட்சத்தில், தொழில்நுட்பச் சாதனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று திரு இப்ராஹிம் கூறினார். நோய்த்தொற்றால் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் சிம் லிம் ஸ்குவேருக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளது என்றார் அவர். அனைவரும் இணையத்தை நாடுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் பகிர்ந்தார்.
கூடிய விரைவில் இணையத்தில் வியாபாரத்தைத் தொடங்கினால்தான் சமாளிக்க முடியும் என்றார் 'டிஜி திரைவ்' எனும் தம் நண்பரின் கடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொழில் பங்காளியாக இருக்கும் திரு தீபன்.
போட்டியும் வாடகையும் அதிகம்
மாதத்திற்கு கிட்டத்தட்ட $3,000 கடை வாடகை செலுத்தினாலும் அதற்கு ஈடுகொடுக்க வியாபாரம் இருப்பதில்லை என்று வருந்தினார் 'அ ஃபோர் ஸ்நான் (S) பிரைவேட் லிமிடெட்' உரிமையாளர் பரி. தாம் 15 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தாலும் கொள்ளைநோய்க்குப் பிறகு வாடிக்கையாளர்களைப் பார்ப்பது அரிது என்றார் அவர். அதோடு இவருடைய கடை பிற இந்திய கடைகள் போலவே நான்காவது தளத்தில் உள்ளதால் கடைகளுக்கிடையே போட்டியும் அதிகரித்துவிட்டது என்றார் அவர்.
வாடிக்கையாளர் கருத்து
இந்நிலையில் இக்கடைத்தொகுதியை இன்னாளிலும் நாடுவது பற்றி வாடிக்கையாளர் சிலர் கருத்து கூறியிருந்தனர்.
கப்பல் துறையில் தகவல் தொழில்நுட்ப நுணுக்கராக இருக்கும் 55 வயது ஷங்கர், கடந்த 15 ஆண்டுகளாக சிம் லிம் ஸ்குவேருக்கு வருகையளிப்பதாகக் கூறினார். வாரம் தவறாமல் இங்கு வரும் இவர், கப்பல்களுக்குத் தேவைப்படும் சாதனங்கள் இங்கு மட்டுமே எளிதில் கிடைக்கின்றன என்றார்.
ராஜசேகர் ரெட்டி, 60, ஒரு காலத்தில் சிம் லிம் ஸ்குவேருக்குத் தாம் வராமல் இருந்தால் அது ஆச்சரியம் என்றார். எண்ணெய் எரிவாயுத் துறையில் பொறியாளராக இருக்கும் இவர், நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு முதல்முறையாக கடந்த வாரம் சிம் லிம் ஸ்குவேர் வந்திருந்தார். அவர் சென்ற கடையில் வாடிக்கையாளரே இல்லாதது அதிர்ச்சி அளித்ததாகக் கூறினார்.
மாதம் இருமுறை 46 வயது வடிவேல் மாரிமுத்து சிம் லிம் ஸ்குவேருக்கு வருவதுண்டு. கட்டுமானத் துறையில் பணிபுரியும் இவர், விடுமுறைக் காலத்தில் இந்தியாவிற்குச் செல்லும்போதெல்லாம் தவறாமல் சிம் லிம் ஸ்குவேருக்கு வந்து இந்தியாவில் இருக்கும் தம்முடைய குடும்பத்தினருக்குச் சாதனங்கள் வாங்கிவிடுவார். பத்து ஆண்டுகளாக இங்குப் பொருள் வாங்கும் அவர், இங்கு விற்கப்படும் சாதனங்கள் தரமானவை என்று கூறினார்.
கடல்துறைப் பொறியாளராகப் பணிபுரியும் 49 வயது பி.விஜய், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விடத்திற்கு வருவது வழக்கம். மாதம் ஒரு முறையாவது தம்முடைய குடும்பத்தினரோடு இங்கு வரும் இவர், இம்முறை தம்முடைய மகனை அழைத்து வந்து அவருக்கு மடிக்கணினி வாங்கித் தந்தார். பிற கடைத்தொகுதிகளை ஒப்பிடுகையில் இவ்விடம் தரத்திலும் விலையிலும் சிறந்தது என்றார்.
தரம் மாறாது என்பதில் உறுதி
சில கடைகள் இடம் மாறலாம், அல்லது புதிய கடைகள் இங்கு திறக்கப்படலாம் என்று குறிப்பிடும் சிம் லிம் ஸ்குவேர் கடைக்காரர்கள், தங்களின் வியாபார மந்தநிலையிலும் தாங்கள் விற்கும் பொருள்கள் தரத்தில் குறைந்தவை அல்ல என்று உறுதிப்படக் கூறினர்.

