தமிழ்மொழியின் பயன்பாட்டை சிங்கப்பூரில் ஊக்குவிக்கும் வகையில் வளர்தமிழ் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த உருவச்சின்ன வடிவமைப்பு போட்டியில் முதல் பரிசுத் தொகையாக, $2,000ஐ தட்டிச் சென்றார் திரு சசிகுமார், 30.
எதிர்காலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், நிகழ்காலத்தில் தமிழ்மொழிப் பயன்பாட்டையும் தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் நம் இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிக்கும் விதமாக 'அன்பு' என்று பெயரிடப்பட்ட உருவச்சின்னம் அமைந்துள்ளது.
வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாவுக்காக அறிமுகப்படுத்த விரும்பும் இந்த உருவச்சின்னம், உருவாக்கம் பெற இரண்டு வாரங்கள் ஆனதாக சசிகுமார் குறிப்பிட்டார். உலகம் மின்னிலக்கமயம் ஆவதை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளது இவருடைய தயாரிப்பு.
இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவின் கருப்பொருள் 'அ' எழுத்தில் தொடங்குவதால் நண்பர்களின் பரிந்துரையில், இவர் அந்த உருவச்சின்னத்திற்கு 'அன்பு' என்று பெயரிட்டார்.
இக்கதாபாத்திரம் 3000ஆம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்க, தற்போதைய ஆண்டான 2023க்குப் பயணிப்பதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2023ல் தமிழ்மொழியின் பயன்பாடு, குறிப்பாக இளையர்களுக்கிடையே அதை வலுப்படுத்தவும் எதிர்காலத்தில் தமிழ்மொழி செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கவும் இந்த உருவச்சின்னம் மீண்டும் 3000ஆம் ஆண்டுக்குப் பயணிப்பதாக இருக்கும்.
எதிர்காலத்திலும் தமிழ்மொழிப் புழக்கம் சிறப்பாக இருக்கும் என்பதைச் சித்திரிக்கும் வண்ணம் இந்த உருவச்சின்னம் அமையும்.
உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் சசிகுமார், வடிவமைப்புக் கலையைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.
தமது 17வது வயதில் வடிவமைப்பு மென்பொருள்களுக்கு அறிமுகமாகி பின்னர் 19வது வயதில் தமது முதல் வரைகலை வடிவமைப்பைப் படைத்தார்.
தமிழ் நாடகங்களுக்குச் செல்வது, தமிழ் தயாரிப்புகளுக்குச் செல்வது ஆகியவை மூலம் தம்மைத் தமிழ்மொழியுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் இவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் புத்தகங்களும் வாசித்து வருகிறார்.
தமக்குக் கிடைத்த $2,000 ரொக்கத்தை நேப்பாளத்தில் இருக்கும் வசதிகுறைந்த மாணவர்களின் கல்விக்கு நன்கொடையளிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்மொழி தொடர்பில் இப்பரிசை வென்றுள்ள சசிகுமார், இதில் பெருமிதம் கொள்கிறார்.
"என்னதான் நவீனமயமாகும் இந்தச் சூழலில் நாம் வாழ்ந்தாலும் மொழி மீது நாம் கொண்டுள்ள ஆர்வமும் மொழி நம் மீது கொண்ட தாக்கமும் என்றும் மாறாதது," என்றார் அவர்.
செய்தி: அனுஷா செல்வமணி

