உலகம் முழுவதுமே பணவீக்கம் அதாவது விலைவாசி கன்னாபின்னாவென்று எகிறிநிற்கிறது. சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் கூடிவிட்டது. சென்ற ஆண்டு எல்லா பொருள்களுக்குமான பணவீக்கம் 6.1% கூடியது. 2021ஆம் ஆண்டில் இது 2.3% ஆக நிலவியது. இந்த ஆண்டிலும் பணவீக்கம் தொடரும் என்றே பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு முழுமைக்கும் பணவீக்கம் 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொருள் சேவை வரியும் 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் எல்லாக் குடும்பங்களுக்குமே சுமை கூடிவிட்டது.
மக்களின் சுமையைக் கொஞ்சம் குறைத்து, அவர்கள் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான உதவிகளை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். குடும்பங்களின் வருமானம், உறுப்பினர் எண்ணிக்கை, பிள்ளைகளின் வயது, படிக்கும் பிள்ளைகளா, என்ன படிக்கிறார்கள், வீட்டில் வசிக்கும் முதியோர், அவர்களின் நிலை, வசிக்கும் வீட்டின் அளவு என்பதையெல்லாம் பொறுத்து குடும்பத்துக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
மூன்று மாறுபட்ட குடும்பங்கள் பெறும் உதவிகளை இங்கே காணலாம்.
நான்கறை வீடு $4,000 மாத வருமானம்
கணவர் (42 வயது, செயல்முறை தொழில்நுட்பர்)
மனைவி (42 வயது, சுகாதார சேவை பணியாளர்)
கணவர், மூன்று பிள்ளைகள், அத்தை என மொத்தம் ரேணுகா அறிவழகனின் குடும்பத்தில் அறுவர் உள்ளனர்.
சுகாதார சேவைத் துறையில் பணிபுரியும் ரேணுகா, செயல்முறைத் தொழில்நுட்பராகப் பணிபுரியும் தம்முடைய கணவர் பிரகாஷுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 4,000 வெள்ளி வருமானம் ஈட்டுகிறார்.
ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய செலவுக்கு 2,500 வெள்ளி வரை ஆகிறது.
இச்சூழலில் 12 வயது மகன், 10 வயது மகள், ஒன்பது வயது மகன் ஆகியோரின் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகச் சிரமமாக உள்ளது என்று கூறினார் ரேணுகா.
அத்துடன் தம்முடைய இரு மகன்களும் 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மிகைச்சுறுதி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவச் செலவும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
தற்சமயம் தோ பாயோ பகுதியில் நான்கறை வீட்டில் வசித்து வரும் இந்தக் குடும்பத்துக்கு, சிண்டாவின் ஆதரவு மிகுந்த துணையளிக்கிறது.
மேலும் ரேணுகாவின் அத்தை குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதால், பிள்ளைகளை குழந்தைப் பராமரிப்பில் சேர்ப்பது அல்லது பணிப்பெண் அமர்த்து வது போன்ற செலவுகள் குறைகின்றன.
எனினும், உணவுப் பொருள், போக்குவரத்து, அத்தியவாசியப் பொருள்கள் என எல்லாமே விலைகூடி விட்டதால் சமாளிப்பது இந்தக் குடும்பத்துக்கு சிரமமாக உள்ளது.
செலவுகள் கூடிய அளவுக்கு வருமானம் உயராத நிலையில், அரசாங்கம் அளிக்கும் உதவித் தொகைகள் கைகொடுக்கும்.
நிரப்புத்தொகை, வழங்குதொகைகளுடன் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு நிரப்புத்தொகை, சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதரவுத் திட்டங்கள் இந்தக்குடும்பத்திற்குப் பேருதவியாக அமையும்.
பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுகளின் மதிப்பு இவ்வாண்டு உயர்த்தப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் ரொக்கத் தொகை கிடைக்கும். தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரொக்கம் $300லிருந்து $650ஆக அதிகரிக்கப்படுகிறது.
இதன்மூலம் 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் $700லிருந்து $2,250 வழங்கப்படும்.
படிக்கும் மூன்று பிள்ளைகளின் எடுசேவ் கணக்கில் அல்லது உயர்க்கல்வி கணக்கில் $300 நிரப்பப்படும். இவை தவிர்த்து, கல்வி உதவி உள்ளிட்ட ஏனைய சமூக உதவித் திட்டங்களும் இவர்களுக்கு உதவும்.

