கணவர் (82 வயது, ஓய்வுபெற்றவர்)
மனைவி (68 வயது, ஓய்வுபெற்றவர்)
ஓய்வுபெற்ற மூத்த தம்பதியரான பழனியாண்டி கருப்பையா - மாரியப்பன் ஜெயலட்சுமி இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் முதியவர்களுக்கு உதவிகள் அதிகரித்திருப்பதை வரவேற்றனர். தங்களுக்கு அதிக பயன்தரும் வகையில் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினர்.
தங்களுடைய மூன்று மகன்களுக்கும் திருமணமான நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐந்தறை வீவக வீட்டில் இருவரும் வசித்து வருகிறார்கள்.
'வெல்டிங்' எனப்படும் சாதனங்களைப் பற்றவைக்கும் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் திரு பழனியாண்டி. திருவாட்டி ஜெயலட்சுமி, 'ஆப்டிகல்ஸ்' என்ற கண்ணுக்குரிய ஒளியியல் துறையில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர்.
தங்களின் மாதாந்திரச் செலவு களைச் சமாளிப்பதற்குத் தங்களது சேமிப்பும் அவ்வப்போது மகன்களிடமிருந்து கிடைக்கும் உதவியும் உதவுவதாக அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். பணிப்பெண் செலவுகளை பிள்ளைகளே பார்த்துக்கொள்கின்றனர்.
எனவே, இருவருக்கும் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 500 வெள்ளி செலவாவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின்படி ஏறத்தாழ $6,500 மதிப்பிலான ஆதரவை இத்தம்பதியர் பெறவுள்ளனர். முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறையினருக்கான சலுகைகளையும் பெறுகின்றனர்.
ஓய்வுக்காலத் தொகைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மத்திய சேம நிதி மாதாந்திர வழங்குதொகை, $250லிருந்து $350 ஆக உயரும். மருத்துவச் செலவுகளுக்கு மெடிசேவ் தொகையைச் சார்ந்திருக்கும் இவர்கள், இதுபோன்ற திட்டங்கள், தங்களின் செலவுகளுக்கு வெகுவாகக் கைகொடுக்கும் என்றனர்.
"எங்களுக்கு தேவைகள் குறைவு. எனினும் உதவி தேவைப்படும் முதியோர் பலர் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் இந்த ஆதரவு பேருதவியாக இருக்கும்," என்று திருவாட்டி ஜெயலட்சுமி தெரிவித்தார்.

