ஆ. விஷ்ணு வர்தினி
கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய பண்புகளால் சிங்கப்பூர் குடியரசு கடற்படையில் திறம்படப் பணிபுரிந்து வருகின்றனர் தீபாவும் ஜெயந்தியும். பல சவால்களைச் சமாளித்து தங்களை நிலைநிறுத்தியதுடன் தொடர்ந்து ஏற்றம்கண்டு வந்துள்ளனர் இவ்விருவரும்.
'ராணுவ நிபுணர் 2' ஆக அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ள 26 வயது எலைஸர் தீபா ஜீவன் ராஜ், பத்தாண்டு காலமாய் கடற்படையில் பெற்றுள்ள அனுபவங்கள் பல. இப்பதவி உயர்வு கிட்டும்போது கருவுற்றிந்த அவர், பணியில் மேன்மேலும் உயர, மேற்பார்வையாளர் படிப்பை மேற்கொண்டு தேர்ச்சி அடையவும் செய்தார்.
நாட்டிற்கு சேவையாற்றும் ஆவலில் 16 வயதில் கடற்படையில் இணைந்தார் தீபா. தற்போது கடற்படை தளவாட தளபத்தியத்தில் மூத்த இணைப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
பதின்ம வயதில் மிகவும் அமைதியாக இருந்த அவர் துணிந்து பேசவும் மாட்டார். தீபாவின் சிறிய உடற்கட்டைக் குறிப்பிட்டு கடற்படையில் தாக்குப்பிடிக்க முடியாது என்றனர் சிலர். அவரோ, ஆண்களின் பங்களிப்புக்கு நிகராக பெண்களும் சேவையாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் முனைப்பில் தொடர்ந்து உழைத்தார்.
இளம் வயதில் 'விண்ட் சர்ஃபிங்' முதலிய கடல்சார் விளையாட்டுகளில் ஈடுபடும் வேளையில் தொலைவில் இருந்து அவர் போர்க்கப்பல்களைப் பார்த்ததுண்டு. ஒருநாள் கடற்படை வீரராக அத்தகைய கப்பலில் பணியாற்றுவோம் என்று அப்போது அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
இரட்சணியர் சேனையின் சிறுவர் இல்லத்தில் வளர்ந்த தீபா, தற்போது ஓர் அழகான குடும்பத்தின் தலைவி. கணவர் ஜீவன் ராஜும் கடற்படையில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு ஒரு வயதில் மகளும் கைக்குழந்தையான மகனும் உள்ளனர். கணவனும் மனைவியும் சில நேரங்களில் மாதக்கணக்கில் ஒருவரையொருவர் காணமுடியாமல் போவது, குழந்தைகளுடன் ஒரு நாளில் சில மணி நேரமே செலவிட முடிவது என, இக்கட்டான சூழல்களை ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து கடந்து வந்துள்ளனர்.
"தீபா எப்போதும் நம்பிக்கையுடனும் மீள்திறனுடனும் செயல்படுபவர். கடற்படையில் பெற்ற அனுபவங்களுடன் நல்ல தலைவராகவும் அவர் உருவெடுத்துள்ளதில் பெருமைகொள்கிறேன்," என்றார் 'ராணுவ நிபுணர் 2' ஆகப் பணியாற்றும் ஜீவன் ராஜ்.
பணியில் மேலும் முன்னேறவும் தனது மகளுக்கு முன்மாதிரியாக விளங்கவும் உறுதியெடுத்துள்ளார் தீபா.
தீபாவைப் போலவே, தனது இளமைக் காலத்தில் கடற்படையின் விளம்பர அறிக்கையைக் கண்டு வேலையில் சேர்ந்தவர் ஜெயந்தி ஆறுமுகம்.
வழக்கநிலைத் தேர்வை எழுதிய பின்னர், கூட்டு பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டயக்கல்வித் திட்டத்தின்கீழ் தாதியர் படிப்பு மேற்கொண்டார் அவர்.
படிப்பை முடித்தவுடன் நீரடி போர் மருத்துவ வீரராக சிங்கப்பூர் கடற்படையில் இணைந்தார். அப்போது இந்தப் பதவியை வகித்த ஒரே பெண்ணாக விளங்கினார் ஜெயந்தி.
பணியிடத்தில் சுற்றி ஆண்களே இருந்த நிலையால் அவர் அவ்வப்போது மனஉளைச்சலுக்கு ஆளானார்.
போர்ப் பயிற்சிகளில் அதிக எடையுள்ள பைகளை சுமந்தபடி நீண்டதூரம் நடக்கவேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டு பயிற்சிகளை முழுமையாக முடிக்கவேண்டும்.
ஆனால், சக ஆண் வீரர்கள் தன்னைச் சமமாக நடத்தியது இவருக்கு நம்பிக்கை ஊட்டியது.
சவால்கள் இருந்தபோதும் மனதுக்குப் பிடித்த இப்பணிக்காகத் தொடர்ந்து போராடினார். தற்போது 43 வயதாகும் ஜெயந்தி தலைமை மருத்துவப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிகிறார்.
இரு பிள்ளைகளின் தாயான ஜெயந்திக்கு, பிள்ளைகளின் வாழ்வில் உள்ள சில மைல்கற்களை அருகில் இருந்து கொண்டாட முடியாதது உள்ளிட்ட சில வருத்தங்களும் உண்டு.
எடுத்துக்காட்டாக, மூத்த மகன் குழந்தையாக இருந்தபோது முதலில் அடி எடுத்துவைத்ததை அவர் காண முடியவில்லை. இருப்பினும், கணவர் தினகரன் குடும்பத்தைப் பராமரிப்பதில் பெரிதும் கைகொடுப்பதாகக் கூறினார் ஜெயந்தி.
20 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு திமோரில் செலவிட்ட ஐந்து மாதங்கள் ஜெயந்திக்கு மறக்க முடியாதவை. அங்குள்ள வசதிகுறைந்த மக்களுக்கு தன் குழுவுடன் இணைந்து மருத்துவ உதவி வழங்கினார் அவர்.
கடற்படையில் இணையும் இளம்பெண்களுக்கு மதியுரைஞராக வழிகாட்டும் ஜெயந்தி, சிறுபான்மையினராக இருப்பதில் அவர்களுக்குள்ள கவலைகளைப் போக்கி நம்பிக்கை ஊட்டுகிறார்.
"நாட்டிற்கு சேவையாற்றுவதில் பேதம் ஏதுமில்லை. பெண்ணோ ஆணோ, ராணுவ அனுபவம் ஒருவரின் முழுமையான ஆற்றலை உணர வைக்க வல்லது," என்கிறார் ஜெயந்தி.

