அர்ப்பணிப்பும் அன்பும் தாதிமையின் ஆதாரங்கள்

அர்ப்பணிப்பும் அன்பும் தாதிமையின் ஆதாரங்கள்

2 mins read
448e533c-9fce-4b68-aa2d-b512e94b6cf7
-

மோன­லிசா

தனி­மை­யில் வாழும் மூத்­தோர் பல­ருக்கு தாதி­மைச் சேவைக்­கும் அப்­பால் அவர்­க­ளின் மனநிலை­யில் அக்­கறை செலுத்­து­வது மிகுந்த மன­நி­றைவு அளிப்­ப­தா­கக் கூறு­கி­றார் 47 வய­தா­கும் தாதி ரேணுகா நாக­லிங்­கம்.

வெளி­யில் அழைத்­துச் செல்­வது, ஆரோக்­கி­ய­மான முறை­யில் பொழு­து­போக்­கும் நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வது போன்ற செயல்­பா­டு­களை அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த 27 ஆண்­டு­க­ளுக்கு மேல் இத்­து­றை­யில் பணி­பு­ரி­யும் இவர் இல்­லத் தாதிமை அற­நிறு­வ­னத்­தில் முழு­நே­ரத் தாதி­யா­கத் தொண்­டாற்றி வரு­கி­றார்.

பெற்­றோ­ருக்கு ஒரே மக­ளான ரேணுகா, தாயா­ரின் விருப்­பத்­திற்­கேற்ப தாதி­மைத் துறை­யில் பட்­ட­யப் படிப்பை முடித்­த­வு­டன் 1996ஆம் ஆண்டு தாதி­யா­கப் பணி­யில் சேர்ந்­தார்.

பணிக்­கா­லத்­தின் முதல் 13 ஆண்­டு­கள் தேசி­யப் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை உள்­பட பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் தாதி­யா­கப் பணி­யாற்­றி­னார் ரேணுகா. பிறகு 2009ஆம் ஆண்­டில் இல்­லத் தாதிமை அற­நி­று­வனத்­தில் இணைந்­தார்.

"மருத்­து­வ­மனை வார்­டு­களில் பணி­யாற்­றி­ய­போது நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும் வரை­தான் அவர்­க­ளைக் கவ­னிக்க இய­லும். அதன் பின்­னர் அவர்­க­ளு­டைய நிலை­யைப் பற்றி பெரும்­பா­லும் தெரிந்­து­கொள்ள இய­லாது.

"ஆனால் தற்­போது அடிக்­கடி அவர்­கள் வீட்­டிற்கே சென்று, தொடர்ந்து பரா­ம­ரிப்­பது நோயா­ளி­க­ளைப் பாதி­யில் விட்­டு­வி­ட­வில்லை என்ற மன­நி­றைவை அளிக்­கிறது," என்று கூறி­னார் ரேணுகா.

தொடக்­கத்­தில் தாதி­யாக இந்­நி­று­வ­னத்­தில் இணைந்த அவர் தாதி­மைப் பரா­ம­ரிப்பு ஒருங்­கிணைப்­பா­ள­ராக மூன்­றாண்­டு­களுக்கு முன்­னர் பதவி உயர்வு பெற்­றார். 12 தாதி­ய­ருக்­குப் பொறுப்­பா­ள­ராக இருக்­கும் அவர், அன்­றா­டம் ஐந்து முதல் ஆறு நோயா­ளி­களை அவர்­கள் வீட்­டிற்­குச் சென்று பரா­ம­ரிக்கிறார்.

நோயா­ளி­கள் தன் வரு­கைக்­கா­கக் காத்­தி­ருந்து தன்னை வர­வேற்­பது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக அவர் கூறி­னார். ஒரு­முறை சிறு­நீர்ப்­பா­தைத் தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்ட மூதாட்­டிக்கு சேவையளித்தார் ரேணுகா.

தொடக்­கத்­தில் மிகுந்த உடல் உபா­தை­க­ளால் அவ­தி­யுற்ற அம்­மூ­தாட்டி சில மாதங்­க­ளி­லேயே உடல்­ந­லம் தேறி­னார். அவ­ரு­டைய குடும்­பமே இத­னால் நிம்­ம­தி­ய­டைந்­தது. ஒவ்­வொரு முறை அவ­ரைப் பார்க்­கச் செல்­லும்போதும் குடும்­பத்­தி­னர் உணவு தயா­ரித்­துத் தரு­வார்­கள் என்­றார் ரேணுகா.

சில நேரங்­களில் முதுமை கார­ண­மா­கவோ நோயின் வீரி­யம் அதி­க­ரிப்­ப­தாலோ நோயா­ளி­கள் இறந்­து­வி­டு­வர். அதன் பிறகு அவர்­கள் தங்­கி­யி­ருந்த அதே புளோக்­கில் வேறு நோயா­ளி­யைச் சந்­திக்­கச் செல்ல நேரிட்­டால், இறந்­த­வரின் நினை­வு­கள் நிழ­லா­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"என் இறுதி மூச்சு வரை தாதி­மைத் துறை­யி­லேயே பணி­யாற்ற விரும்­பு­கி­றேன். உடல்­நிலை நன்­றாக இருந்­தால் மட்­டுமே வாழ்­வைக் கொண்­டாட முடி­யும். அதற்கு உத­வு­வது என்­னு­டைய பணி­யாக அமைந்­ததை வர­மா­கவே கரு­து­கிறேன்" என்­­றார் ரேணுகா.

கண­வர், இரண்டு மகன்­கள் என குடும்­பப் பொறுப்பு இருந்­தா­லும், சரி­யான திட்­ட­மி­டல் மூலம் பணி­யை­யும் குடும்­பத்­தை­யும் சிறப்­பா­கக் கவ­னித்து வரு­கி­றார் இவர்.

தர­மான சேவைக்கான விருதை 2019ஆம் ஆண்டு பெற்ற ரேணுகா, கிரு­மிப் பர­வல் கால­கட்­டத்­தில் சேவை­யாற்­றி­ய­தற்­கான 'கொவிட்-19 ஹெல்த்­கேர் ஹீரோ' விரு­தை­யும் பெற்­றுள்­ளார்.